பெண்கள் நாட்டின் கண்கள்.. மக்கள் துன்பத்தில் இருக்கும் போது நேசக்கரம் நீட்டுவது அதிமுக அரசு தான் : முதல்வர் பழனிசாமி பேச்சு

ஆம்பூர் :மக்கள் துன்பத்தில் இருக்கும் போது நேசக்கரம் நீட்டுவது அதிமுக அரசு தான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து தமிழக அரசு பாடுபட்டு கொண்டிருப்பதாக ஆம்பூரில் மகளிர் குழுக்களுடனான கலந்துரையாடலின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது 5வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் 2வது நாளான இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:’பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து தமிழக அரசு பாடுபட்டு வருகிறது. பெண்கள்தான் நாட்டின் கண்கள். அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2.82 லட்சம் பேருக்கு தலா ₹25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அந்த அடிப்படையில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக தொடர்ந்து அரசு பாடுபட்டு வருகிறது. ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். எதிர்க்கட்சி தொகுதியாக இருந்தாலும் இங்கு பல்வேறு பணிகள் அரசால் மேற்கொள்ளப்படுகிறது. 234 தொகுதிகளையும் எங்கள் தொகுதிகளாகவே கருதி செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அம்ரூத் திட்டத்திலும் இங்கு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.மதத்தின் அடிப்படையிலும், ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகளை பிரிக்க நிைனக்கிறார்கள். அதிமுக மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ செயல்படும் கட்சியல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் கட்சி அதிமுக. ஆண் ஜாதி, பெண் ஜாதி என்றுதான் பார்க்கிறோம். இந்தியாவில் சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பதில் நம்பர் ஒன்னாக தமிழகம் விளங்குகிறது.சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ரமலான் நோன்பு கஞ்சிக்காக 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. அது தொடர்ந்து வருகிறது. நாகூர் சந்தனக்கூடு விழாவுக்காக விலையில்லா சந்தனம் வழங்கப்படுகிறது. மாவட்ட காஜிகளுக்கு மாதம் ₹15 ஆயிரம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை ₹1,500ல் இருந்து ₹3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.ஹஜ் புனித பயணிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சென்ற போது மழையின் காரணமாக இடிந்து விழுந்த நாகூர் தர்கா குளக்கரை சுவரை கட்டித்தர கோரிக்கை விடுத்தனர். இதற்காக ₹4.5 கோடி ஒதுக்கப்பட்டு அப்பணி நடந்து வருகிறது. இவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கக்கூடிய அரசாக விளங்குகிறது.அதேபோல் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு டாக்டர், நர்சு, மருத்துவ உதவியாளர் நியமிக்கப்பட்டு மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவார்கள். மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட ₹2 லட்சம் ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 41 சதவீதம் பேர். இவர்களில் கடந்த முறை நீட் தேர்வு எழுதி வெறும் 6 பேர் மட்டுமே மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்தனர். 3,060 எம்பிபிஎஸ் சீட்களில் வெறும் 6 பேர் இடம் பெற்ற நிலையில், அவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி இந்த ஆண்டு 435 பேர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.அண்மையில் தைப்பொங்கலுக்கு ₹2,500 வழங்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இவ்வாறு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு ₹1,000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ₹2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு, முழு கரும்புடன் வழங்கப்பட்டது. அடுத்து கொரோனா வந்தது. ரேஷன் கார்டுக்கு அப்போது ₹1,000 வழங்கப்பட்டது. இதுவரை ₹4,500 கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான அரசு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை