பெண்கள் ஏமாற்றம்

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவை பொருத்தவரை இன்னமும் கனவாகவே உள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதிக்கு பாதியுள்ள பெண்கள், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என வரும்போது 11 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே உள்ளனர். உள்ளாட்சிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களால், ஆண்களுக்கு நிகராக போட்டியிட முடிவதில்லை.இதனை கருத்தில் கொண்டு மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதா முதன்முதலாக கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் 108வது சட்ட திருத்தமாக இது கொண்டு வரப்பட்டது. அப்போதே கடும் எதிர்ப்பும் கிளம்பியது. பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதா ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இம்மசோதா நிறைவேறியிருந்தால் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கும். 3 பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் மாற்றமும் செய்யப்பட்டிருக்கும்.நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. இம்மசோதாவை மக்களவையில் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இச்சட்டம் அமலுக்கு வந்தால் உயர்ஜாதி பெண்கள் மட்டுமே அதிக பயன்பெறுவர் எனக்கூறி கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன. மேலும் அக்கட்சிகள் சார்பில் ஜாதி வாரியாக பெண்களுக்கு உள் ஒதுக்கீடு என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. இவ்வாறாக அம்மசோதா தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு முதல் இந்தியாவில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதா பேசு பொருளாகவே உள்ளது. மகளிர் நலனுக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் பாஜவும் இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. மத்தியில் தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள ஒன்றிய பாஜ அரசு நினைத்திருந்தால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் மக்களவையில் இதுநாள் வரை மசோதாவை தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.சர்வதேச அளவில் பெண்கள் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் இந்தியா இன்னமும் பின்தங்கியே உள்ளது. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும், பெண்களின் பின்னணியில் இருந்து ஆண்களே  ஆட்டிப் படைக்கும் அவலமும் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி சாதனை படைக்கும் நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தையும் நிறைவேற்றிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்….

Related posts

பாஜ அரசின் அவலம்

அனல்பறந்த விவாதம்

முதல் எப்ஐஆர்