பெண்களை இழிவுப்படுத்தி பதிவேற்றம் செய்த விருதுநகர் யூடியூப்பர் கைது

 

புதுச்சேரி, மே 31: பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த விருதுநகரை சேர்ந்த யூடியூப்பரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். விருதுநகரை சேர்ந்த துர்க்கைராஜ் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்கின்றனர். அதில் அவர், பல பெண்களுடன் யூடியூப் சேனல் துவக்குவது எப்படி என்றும், நிறைய சப்ஸ்கிரைபர் தங்களது சேனலுக்கு வரவேற்பது எப்படி என்றும் கூறி, அவர்களிடம் பழகி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண், அவரது யூடியூப் சேனல் மூலம் அவருடன் பேசி பழகியுள்ளார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், இதற்கு முன் பேசியபோது பதிவு செய்த ஆடியோ மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து பேசி, அவரது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த பதிவேற்றம் செய்த ஆடியோ மற்றும் வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவரை தவறான தொழில் செய்பவர் என்றும், யூடியூப்பில் நேரலையாக பலமுறை பேசியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், அவரது யூடியூப் சேனலை ஆராய்ந்து பார்த்ததில் அவர், 20க்கும் மேற்பட்ட பெண்களை அநாகரிகமான வார்ததைகளால், இழிவுபடுத்தும் விதமாகவும் பெண்மையை களங்கப்படுத்தும் விதமாகவும் பேசி பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது. மேலும், ஆண்களையும் ஆபாச வார்த்தைகளை திட்டி ஆடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர், பதிவேற்றம் செய்கின்ற இதுபோன்ற அறுவெறுப்பான அநாகரிகமான வீடியோக்களை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தொடர் விசாரணையில், அவர் மீது சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல பெண்கள் அவர் மீது புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வரை அநாகரிகமாக பேசியுள்ளார்.

மேற்கண்ட பிகே விஜய் என்கிற துர்க்கை ராஜின் விவரங்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து, அவருடைய யூடியூப் சேனல் எந்த பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது, அதில் தொடர்பில் உள்ள செல்போன் நம்பர் மற்றும் இணையவழி தொடர்புகளை கண்டுபிடித்த போலீசார், அவர் திருச்சி மற்றும் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மதுரையில் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை