பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் * கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு * 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில்

திருவண்ணாமலை, செப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளில், பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கடந்த ஜூலை 10ம் தேதி தொடங்கி, கடந்த 5ம் தேதி வரை 124 இடங்களில் நடந்து முடிந்தது. அதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். அதன்படி, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது துறைவாரியாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில், பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்திருந்த மாற்றுத்திறனாளிகளில், தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், பெட்ரோல் ஸ்கூட்டர் பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று நடந்தது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனு அளித்திருந்த 248 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதில், 136 பேர் நேற்று நடந்த நேர்காணலில் கலந்துகொண்டனர்.
மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா, வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் சதீஷ்குமார், கைலாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தினர். இந்த முகாமை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் பராமரிப்பு உதவித்தொகை கிடைக்கிறதா, வேறு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து, 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட நபர்கள், பெட்ரோல் ஸ்கூட்டரை இயக்கும் உடல் தகுதி மற்றும் இரண்டு ைககள் நல்ல நிலையில் இருத்தல், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்புக்குரியவர்கள் என பல்வேறு நிலைகளில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று நடந்த பயனாளிகள் தேர்வு முகாமில், 100 மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு தகுதியான நபர்கள் என தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைந்து பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி