பெட்ரோல் போட்டு சமாளிக்க முடியல…: பைக்கை விற்றுவிட்டு குதிரையில் செல்லும் விவசாயி

திருமலை: பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஒருவர், தான் வைத்திருந்த பைக்கை விற்றுவிட்டு குதிரையை வாங்கி பயணம் செய்யும் சுவாரஸ்யம் தெலங்கானாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம்: தெலங்கானா மாநிலம், கத்வால் மாவட்டம், முலகலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குர்ரம்நரசிம்மா, விவசாயி. இவர் தனது போக்குவரத்திற்காக ஒரு பைக் வைத்திருந்தார். ஆனால் தினமும் பெட்ரோல் விலை உயர்வதால் செலவு செய்ய முடியாமல் வேதனைப்பட்டார். இதனால் அவர், தனது பைக்கை  22 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரேதட்டூரில் உள்ள தனது உறவினர் மூலம் ஒரு குதிரை வாங்கினார். தற்ேபாது தினமும் விவசாய நிலத்திற்கும், வெளியூர்களுக்கும் குதிரையிலேயே பயணம் செய்து வருகிறார். பெட்ரோலுக்கு செய்யும் செலவை விட குதிரை பராமரிப்புக்கு குறைவான செலவே ஆகிறதாம்.இதுகுறித்து அவர் கூறுகையில், `சிறுவயதில் இருந்தே குதிரையில் செல்ல வேண்டும் என்பது விருப்பம். இருப்பினும், பைக்கை பயன்படுத்தி வந்தேன். ஆனால் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மாதம்  2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே, பைக்கை விற்று குதிரை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்திற்கு செல்லும்போது குதிரையை மேய்ச்சலுக்கு விட்டு விடுவேன். எனவே எனக்கு போக்குவரத்து செலவு ஏதும் இல்லை. தற்போது எனக்கு பண விரயமும் முற்றிலும் குறைந்துள்ளது’ என்றார்….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு