பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரயில் போக்குவரத்துக்கு மாறும் பொதுமக்கள்

* எக்ஸ்பிரஸ்களில் முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றனநெல்லை : பெட்ரோல் டீசல் விலை, சுங்க கட்டணம் உயர்வு மற்றும் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர். இதன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தென்மாவட்டங்களில் எக்ஸ்பிரஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, வாகனப்பதிவு கட்டணம் உயர்வு என பல்வேறு காரணங்களுக்காக சொந்த கார்களில் பயணம் செய்வதை படிப்படியாக நடுத்தர குடும்ப மக்கள் குறைத்து வருகின்றனர். டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் ஆம்னி பேருந்துகள் தங்கள் கட்டணத்தையும் உயர்த்தி வருகின்றன. இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், ரயில் போக்குவரத்துக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். ரயில்களில் நாளுக்குநாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ரயிலில் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காத காரணத்தால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் பயணம் செய்யும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து 700 கிமீ தொலைவில் இருப்பதால் சென்னைக்கு பயணம் செய்ய தென்மாவட்ட மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே நம்பி உள்ளனர். தமிழகத்தின் மேற்கு எல்லையான கோவை செல்லவும் ரயில் சேவையை நம்பியே உள்ளனர். தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்கள், தென்மாவட்டத்தில் இருந்து சுமார் 600 கி.மீக்கு அப்பால் உள்ளது. இதனால் தென்மாவட்ட பயணிகளின் தேர்வு எப்போதுமே ரயில் பயணமாக உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் வேளையில் தென்மாவட்டங்களில் இருந்து முன்பு இயக்கப்பட்ட சில ரயில்களை மீண்டும் இயக்குவது அவசியமாகிறது. குறிப்பாக நெல்லை- ஈரோடு, மயிலாடுதுறை ரயில்,  கன்னியாகுமரி – ராமேஸ்வரம், நாகர்கோவில் – கச்சிகுடா போன்ற ரயில்கள் இயக்கம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த ரயில்களை மீண்டும் அதே தடங்களில் இயக்க வேண்டும். கோடை காலத்தில் வெயில் காரணமாக பயணிகள் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் பயணிகளுக்கு தற்போது உள்ள குளிர்சாதன பெட்டிகளில் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் இடம் கிடைப்பது இல்லை.  கடந்த 2011-12ம் ஆண்டுகளில் கோடைகாலத்தை முன்னிட்டு நாகர்கோவில் – சென்னை வழி தடத்தில் ஏழைகளின் ரதம் என்ற பெயரில் வாராந்திர சிறப்பு ரயில், சென்னை – நிசாமுதீன் ரயிலின் காலிப்பெட்டிகளை வைத்து இயக்கப்பட்டது. தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள இந்த ரயிலை மீண்டும் சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும். மேலும் தென்மத்திய ரயில்வே மண்டலத்தின் பரிந்துரையின் படி ஐதராபாத் -தாம்பரம் சார்மினார் தினசரி ரயிலை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி இருவழிப்பாதை முடியும் தருவாயில் உள்ளதால் சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை தமிழகத்தின் கடைசி பகுதியான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க முன்வர வேண்டும். இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘விலைவாசி உயர்வு காரணமாக அதிகப்படியான மக்கள் ரயில் போக்குவரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து தென்மாவட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வேயை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தென்மாவட்டங்களில் காலியாக நிற்கும் ரயில் பெட்டிகளை கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதைப்போல சென்னையில் பல்வேறு வாராந்திர ரயில்களின் காலிப்பெட்டிகள் மூன்று நாட்கள் காத்துக்கிடக்கின்றன. அந்த காலிப் பெட்டிகளைப் பயன்படுத்திக் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். சென்னையில் இருந்து மதுரை, நெல்லைக்கு குளிர்சாதன ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே ஆர்வம் காட்ட வேண்டும். அதனால் ரயில்வே துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றார்….

Related posts

சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னையில் குழந்தை திருமணம்: 18 புகார்கள் பதிவு

ஒசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.89 லட்சம் பறிமுதல்