பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு இரக்கமில்லாத அரக்கன் ஒன்றிய அரசு இல்லத்தரசிகள் கடும் கண்டனம்

சென்னை: சென்னையில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ தாண்டி உள்ளது.  பெட்ரோல், டீசல் விலை  அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வுகள்  இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தலைவிகள் சிலர் அளித்த கருத்துக்கள்: கிரிஜா, குடும்ப தலைவி, நந்தம்பாக்கம்:  கொரோனா ஊரடங்கு சூழலில், சமையல் காஸ் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்களைப் போன்றவர்கள் ஒருவேளை சோற்றுக்கே அல்லல்படும் நேரத்தில், இந்த கூடுதல் விலை உயர்வு மிகவும் வேதனை அளிக்கிறது. போதிய வருமானம் இல்லாமலும் வாடகை செலுத்த முடியாமலும் அவதிப்படும் வேளையில், இரக்கமில்லாத அரக்கன் போன்ற இந்த ஒன்றிய அரசு எங்கள் அடிவயிற்றில் கைவைக்கிறது. எனவே காஸ் விலையேற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், நாங்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்படும்.வள்ளி, இல்லத்தரசி, பல்லாவரம்: நாளுக்கு நாள் சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகளான நாங்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகிறோம். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கினால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து, தமிழக அரசு வழங்கி வரும் நிவாரண உதவிகளை மட்டுமே நம்பி, வறுமைக் கோட்டுக்குக்கீழ் வசிக்கும் மக்கள் குடும்பத்தை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கொஞ்சம்கூட மக்களின் நலனில் அக்கறையின்றி, நித்தமும் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது வேதனையளிக்கிறது.அது மட்டுமின்றி சமையல் காஸ் சிலிண்டர்மீது  ஒன்றிய அரசு வழங்கி வந்த மானியமும் முறையாக வங்கிக் கணக்குக்கு வந்து சேருவதில்லை. சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் கடுமையாக உயர்த்துவதால், இனிமேல் விறகு அடுப்பில்தான் ஏழை எளிய மக்கள் சமையல் செய்ய வேண்டிய நிலை வந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.சமையல் காஸ் சிலிண்டர்மீது ஒன்றிய அரசு இதேபோல் தொடர்ந்து விலையேற்றம் செய்தால், நமது நாட்டில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட, போதிய உணவு இல்லாமல் பட்டினிச் சாவு ஏற்பட வழிவகுக்கும். இந்திரா, குடும்ப தலைவி, தாம்பரம்: பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பெட்ரோல், டீசல், காஸ் விலையை தொடர்ந்து உயர்த்தினால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்.அரசு வேலையில் இருப்பவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியும். ஆனால், நடுத்தர மக்களால் எப்படி சமாளிக்க முடியும். இந்த காஸ் விலை உயர்வினால் இனி 2 வேளை சமைத்து, ஒருவேளை பட்டினி கிடந்தால்கூட சமாளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இந்த தொடர் காஸ் விலை உயர்வு கண்டனத்துக்கு உரியது.ரமணி, குடும்ப தலைவி, திருவொற்றியூர்: கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி, வருமானமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே நிலை நீடித்தால், நாங்கள் வீடுகளில் காஸ் பயன்படுத்துவதற்கு பதில், விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க வேண்டியிருக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல், அவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளக்கூடியதாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.உமாமகேஸ்வரி, குடும்ப தலைவி, தண்டையார்பேட்டை: மத்திய அரசு காஸ் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கின்போது சரிவர வேலையில்லாத காரணத்தால் குடும்ப நடத்தவே கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் கேஸ் விலை உயர்வு எங்களை பாதித்துள்ளது. தற்போது சிலிண்டருக்கு 850 ரூபாயும், அதை சப்ளை செய்பவருக்கு 50 ரூபாயும் என 900 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம். தொடர்ந்து காஸ் விலையை உயர்த்தினால் நாங்கள் எப்படி வாழ்வது, விலை உயர்வை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவிதா, இல்லத்தரசி, பெரம்பூர்: நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஒன்றிய அரசு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒரே அடியாய் 25 ரூபாய் உயர்த்தியுள்ளது. தற்போது 850 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கவேண்டும் என்ற மோசமான சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதாரம் உயர்த்தப்படாமல் மக்களின் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்திக்கொண்டே செல்வது எந்த வகையில் நியாயம். நடுத்தர மக்களாகிய நாங்கள் பல செலவினங்களை குறைத்து பட்ஜெட் போட்டு வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  பெரிய, பெரிய முதலாளி களுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய அரசு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு காஸ் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்பதே என்னை போன்ற நடுத்தர குடும்பத்து பெண்களின் கோரிக்கையாக உள்ளது.ஜெயா, வளையல் வியாபாரி, புழல்: சமீபத்தில்ரூ.825 என்றிருந்த காஸ் சிலிண்டர் விலையை மேலும்ரூ.25 சேர்த்துரூ.850 ஆக உயர்த்தியுள்ளனர். இதுதவிர, வீடுகளுக்கு சிலிண்டர் எடுத்து வந்து போடும் ஊழியர்கள் அதிகபட்சம்ரூ.50 கூடுதல் டெலிவரி கட்டணம் பெறுகின்றனர். இதனால் என்னை போன்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள்ரூ.900 விலை கொடுத்து காஸ் சிலிண்டரை வாங்கும் அவலநிலை உள்ளது. அன்றாட கூலிவேலைக்கு செல்லும் எங்களை போன்றவர்கள், இந்தத் தொடர் விலை உயர்வை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பெட்ரோல், காஸ் மற்றும் டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சீத்தாலட்சுமி, குடும்ப தலைவி, நீலாங்கரை: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல், அன்றாட வாழ்க்கை நடத்த முடியாமல் மிகவும் அவதிபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம். எனவே, உடனடியாக விலை உயர்வை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்….

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது