பெட்ரோல் கேனுடன் செல்போனை வைத்ததால் மொபட் தீப்பிடித்து எரிந்து இளம்பெண் உடல் கருகினார்: மருத்துவமனையில் அனுமதி

 

மாதவரம்: பெட்ரோல் கேனுடன், செல்போனையும் சேர்த்து மொபட்டில் எடுத்து சென்றபோது, திடீரென தீப்பிடித்ததால், இளம்பெண் உடல் கருகினார். வியாசர்பாடி, சஞ்சய் நகரை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனத்தில் ஏரியா வினியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி, அதனை ஒரு பையில் போட்டு, மொபட்டின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு வைத்து இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் சென்றபோது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

உடனே, பெட்ரோல் வைத்திருந்த பையில் தீவிபத்து ஏற்பட்டதால், பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. ரோகிணி மொபட்டை நிறுத்தி, கீழே இறங்குவதற்குள், அவர் மீதும் தீ பரவியதால், உடல் கருகினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டனர். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு ரோகிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொபட்டில் எடுத்து சென்ற கேன் மூடியை சரியாக மூடாததால், பெட்ரோல் கசிந்ததாகவும், அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்ததால், தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை