பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்திய ₹2.50 லட்சம் மதிப்புள்ள 650 மதுபாட்டில்கள் பறிமுதல்-3 பேர் கைது

சித்தூர் :  பெங்களூருவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய ₹2.50 லட்சம் மதிப்பு அரசு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சித்தூர் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் திருப்பதி பைபாஸ் சாலையில் செர்லோபள்ளி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. உடனே காரை பின் தொடர்ந்து விரட்டி சென்று ஒரு இடத்தில் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 4 பேரும் இறங்கி தப்பி ஓட முயன்றனர். போலீசார் தப்பியோட முயன்ற 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். காரை சோதனை செய்ததில் அதில் 650 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பங்காரு பாளையம் பேரு  பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர்(31), பங்காரு பாளையம் மண்டலம் செட்டேரி  பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(25), யாதமரி மண்டலம் முத்தர பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (68) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டன் என்பவர் கேஜி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தப்பியோடிய மணிகண்டனை போலீசார் விரைவில் கைது செய்வார்கள். மேலும் விசாரணையில் இவர்கள் கர்நாடகா மாநிலம் முள்பாகல் பகுதியிலிருந்து மிக குறைந்த விலையில் கர்நாடகா அரசின் மதுபாட்டில்களை வாங்கி வந்து சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் மண்டல சுற்றுப்புற கிராமங்களில் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 650 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களில் மதிப்பு ₹2.50லட்சம், காரின் மதிப்பு ₹3.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.  இதுகுறித்து சித்தூரில் நேற்று தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலையா நிருபர்களிடம் கூறினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் ஏராளமான போலீசார் உடன் இருந்தனர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது