பூஸ்டர் அவசியம்

நாடு முழுவதும் கொரோனா எனும் பெரும் தொற்று ஏற்படுத்திய அழிவை மறந்துவிட முடியாது. கொரோனா இரண்டாம் அலையின் போது ஒன்றிய அரசு சரியாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு  மாநிலங்களவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2வது அலையின் போது அதிக இறப்புகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை, கள்ள சந்தையில் மருந்துகள் விற்பனை  போன்ற சீர்கேடுகள் நடந்துள்ளன. கொரோனாவால் உலகிலேயே மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது சுகாதார கட்டமைப்பு பலவீனமாக இருந்ததால் மக்கள் பெரிய அழுத்தத்தை சந்தித்தனர். மேலும் 5 லட்சத்துக்கும் மேலாேனார் இறந்துவிட்டனர்.  கொரோனாவின் அடுத்தடுத்த தாக்கத்தை ஒன்றிய அரசால் கணிக்க முடியாமல் போய்விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி நாட்டையே உலுக்கி எடுத்த கொரோனா பாதிப்பு இன்னும் முற்றிலும் விடைபெறவில்லை. கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது என்ற ஆறுதல் தான் கிடைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது.  ஆனால் மக்களிடையே கொரோனா மீதான பயம் நீங்கிவிட்டதால் அபாயத்தை உணராமல் அலட்சியமாக உள்ளனர். ஆனால் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் தட்டம்மை  போன்ற நோய்களுக்கு போடப்படும் ‘எம்எம்ஆர்’ தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும். கொரோனா தடுப்பூசி வீரியம் குறிப்பிட்ட கால அளவில் குறைந்துவிடும் என்பதால் தான் பூஸ்டர் டோஸ் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி நோய்பரவலை தடுப்பூசி கட்டுப்படுத்துவதால் பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் பல மாதங்களுக்கு பிறகும் காணப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியால் இது குறையும். கொரோனா தடுப்பூசி மீதும் பூஸ்டர் டோஸ் மீதும் மக்களுக்கு தேவையில்லாத பயம் நிலவி வந்தது. ஆனால் அதுபோன்று எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை. எனவே அனைவரும் பூஸ்டர் டோஸ்களை தயக்கமின்றி போட்டுக்கொள்ளலாம். அதனால் தான் தமிழக அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்துகிறது. மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டு வரும் முன் காப்போம் என்பதற்கிணங்க வாழ வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது….

Related posts

பிரசாரம் ஓய்ந்தது

ஆருயிர் காப்போம்

இங்கிலாந்தில் இந்தியா