பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்

*    திருவரங்கம் கோயிலில் தற்போதுள்ள விமானத்துடன், ரங்கநாத ஸ்வாமியை பிரம்ம தேவன் ஆராதனம் செய்து வந்தார். பின்னர் இந்த பெருமானை  இக்ஷ்வாகு மன்னனுக்கு கொடுத்தார்.  இக்ஷ்வாகு மன்னன் வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று ஆகி, அந்த வம்சத்தில் ஸ்ரீ ராமர் அவதரித்தார். பின்னர் அந்த ராமபிரான் விபீஷணனுக்கு இந்த ரங்கநாதரை விமானத்துடன் அளித்தார். விபீஷணன் காவேரி கரையில் தன் அனுஷ்டானங்களை முடிக்க, எண்ணி தற்போதுள்ள திருவரங்கம் என்னும் க்ஷேத்ரத்தில் விமானத்தை இறக்கினார். தன்னுடைய அனுஷ்டானத்திற்காக சென்றார்.*    சோழ அரசன் தர்மவர்மன், ஸ்ரீமன் நாராயணன் தன் நாட்டிற்கு வர வேண்டும் என்று தவம் இருந்தான். அந்த பெருமாளைக் கண்டு தன் தவத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் இங்கு வந்தார் என்று எண்ணி பூஜை செய்ய ஆரம்பித்தான். *    திரும்பி வந்த விபீஷணனுக்கும் தர்மவர்மனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இது யாருடைய பெருமாள் என்று. இருவரும் ஸ்ரீ ராமரையே கேட்டு விட எண்ணி அயோத்தி சென்றனர். *    ஸ்ரீ ராமர், நான் அனைவருக்கும் சமம். நீங்கள் இருவருமே என் பக்தர்கள். இருப்பினும் விபீஷணன் அரக்கன். அவனுக்கு  வானில் பறக்கும் சக்தி உண்டு. அதனால் இலங்கை நோக்கி நான் பள்ளி கொள்கிறேன். தினம் விபீஷணன் பறந்து வந்து திருவரங்கனை தரிசிக்கட்டும் என்று கூறி திருவரங்கத்தில்  அருட் பாலிக்கின்றார். *    பின்னர் அந்த தர்மவர்மன் தான் பெருமாளுக்கு முதற்கண் கோயிலைக் கட்டி வழிபட்டான். இன்றளவும் வைணவ பெரியோர்கள் கோயில் என்று சொன்னாலே அது திருவரங்கத்தை தான் குறிக்கும். *    இந்த கோயிலில் எல்லாமே பெரிய என்று தொடங்கும் சிறப்பு உடையது. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய ஜீயர் ( ஸ்வாமி மணவாள மாமுனிகள்), பெரிய ஆழ்வார், பெரிய கருடன், அகண்ட காவேரி, பெரிய அவசரம் (சமையல்) இது போன்று கோயிலின் விமானம் ப்ரணவ விமானம். *    கோயிலின் ராமர் சந்நதி அருகில் சந்திர புஷ்கரணி அமைத்துள்ளது.   *    அங்குள்ள புன்னை மரத்தடியில், பல ஆன்மீக சொற்பொழிவுகள் வைணவ ஆசார்யர் ஸ்வாமி ஆளவந்தார் காலத்தில் இருந்து நடந்தேறின. *    சைதன்ய மகாபிரபு சரித்திரத்திலே, அவர் திருவரங்கம் வந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அங்குள்ள சந்திரபுஷ்கரணியில் பீச்சாங்குழல் கொண்டு விளையாடும் கண்ணன் ராதை இருவரும் அவருக்கு ப்ரத்யக்ஷம். அந்த சந்நதி இன்றும் உள்ளது புஷ்கரணியில். மகாபிரபு, அந்த காட்சியைக் கண்டு சில நாட்கள் மூர்ச்சித்த நிலையில் இருந்தார். *    மகாபாரத காலத்தில் பீஷ்மரின் தந்தை சந்தனு இந்த தலம் வந்து பெருமானை பூஜித்துள்ளார். அவர் பெயரால் இங்கு சந்தனு மண்டபம் என்று ஒரு மண்டபம் உண்டு. நாளடைவில் அது சந்தன மண்டபம் என்று ஆகி விட்டது.*    ஆழ்வார்கள் பதினொருவர் (மதுரகவிகள் தவிர) இந்த ரங்கநாதஸ்வாமியை மங்களாசாசனம் செய்துள்ளனர். *    ஸ்ரீ  வைஷ்ணவ ஆச்சார்யர்கள் ஆளவந்தார், பெரிய நம்பிகள், ஸ்வாமி ராமானுஜர்,எம்பார், கூரத்தாழ்வான், முதலியாண்டான், பராசர பட்டர், நம் ஜீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாச்சார்யார், அழகியமணவாள பெருமாள் நாயனார், ஸ்ருத ப்ரகாசிகா பட்டர், ஸ்வாமி மணவாள மாமுனிகள் முதலிய ஏனையோர் அரங்கன்மேல் அபிமானத்துடன் வாழ்ந்த ஊர் இந்த  திருவரங்கம்….

Related posts

கனவு இல்லத்துக்கு கைகொடுக்கும் இறைவன்

பூவும் பூசையும்…

திருமண வரம் அருளும் கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்