பூந்தமல்லி அருகே பள்ளத்தில் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பயணிகள் காயம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே இன்று காலை எதிரே லாரி மோதுவது போல் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று காலை ஒரு தனியார் ஆம்னி சொகுசு பஸ் கிளம்பியது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்றபோது, எதிரே சொகுசு பஸ்சை இடிப்பது போல் ஒரு மணல் லாரி வேகமாக வந்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ், சாலையோரத்தில் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்க முயற்சித்தனர். எனினும், அவசரகால கதவு திறக்காததால், பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாற்று பேருந்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாமல், பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவதற்கு காரணமாக உள்ளது என அப்பகுதி மக்களும் பயணிகளும் வேதனை தெரிவித்தனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி