Monday, July 8, 2024
Home » பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!

பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தொழி ‘‘கேரளாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஊரில்தான் என் அப்பாவும் பிறந்தார். அங்கே எல்லோரும் எப்போதும் ரவிவர்மாவின் பெருமைகளை பேசுவார்கள். எங்கள் ஊரிலும் பலருக்கும் கலை நயம் இருந்தது. ஆனாலும் ரவிவர்மா ஒரு மன்னர். அவர் மன்னராக இருந்து ஓவியரானவர். அதனால் என்னதான் ஓவியக் கலை மீது மரியாதை இருந்தாலும் ஆர்வம் இருந்தாலும், தங்கள் குழந்தைகள் ஓவியத்தை வாழ்வாதாரமாக மாற்றிக்கொள்ள எங்கள் பெற்றோர்கள் அனுமதித்தது இல்லை. ஒரு நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் எல்லா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களைப் போல, எனது பெற்றோரின் ஆசையாகவும் இருந்தது’’ என்று கூறும் தான்யா தற்போது கடவுள் ஓவியங்களை தீட்டி வருகிறார்.‘‘நான் நல்லா படிப்பேன். ஓவியமும் வரைவேன். ஆனால் எதிர்காலத்தில் ஓவியராவேன்னு நான் நினைச்சுகூட பார்க்கல. பள்ளி படிப்பு முடிந்து பொறியியலில் சேர்ந்தேன். ஐ.ஐ.டி கான்பூரில் எம்.டெக் கடைசி வருடம் பயிலும் போது, எனக்கு அந்த படிப்பு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியது. நல்ல மார்க் வாங்கினாலுமே எனக்கு மன திருப்தி இல்லை. வேண்டாம் என்று பாதியிலேயே படிப்பை விட நினைச்சேன். என் பேராசிரியர்கள் தான், ‘‘இவ்வளவு தூரம் வந்துட்ட, இன்னும் சில மாதங்கள் தானே, படித்துக்கொண்டே ஓவியத்தை பழகு’ன்னு அறிவுரை சொன்னாங்க. அதனால் படிப்பை முடிச்சேன். அதன் பிறகு முழுநேர ஓவியரா மாறினேன். 2015ல் நான் வரைந்த ஓவியங்களை எப்படி யாரிடம் விற்பதுன்னு எனக்கு தெரியல. ஒரு வருடம் முழுக்க நான் வரைந்த அனைத்து ஓவியங்களும் அப்படியே இருந்தது. அதற்கு மேல் எனக்கு முயற்சி செய்ய தைரியமும் இல்லை. அதனால் ஓவியத்தின் மீதான ஆசையை என் மனதுக்குள் புதைத்துக்கொண்டேன். இதற்கிடையில் திருமணமும் ஆனதும். ஓசூரில் செட்டிலானேன். திருமணத்திற்கு பிறகு நான் ஓவியம் வரைவதையே மறந்து நானும் என் கணவரும் ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டோம். அப்போது ஒருவர் சென்னையில் உள்ள ஒரு பாபாவிடம் என்னை அழைத்துச் சென்றார். அந்த குரு என்னை பார்த்ததுமே என் பெயர், பின்புலம் எதுவும் தெரியாமல், ‘நீ ஏன் வரைவதில்லை. ஓவியங்கள் வரைவதில் உன் கவனத்தை செலுத்து. அடுத்த முறை என்னை பார்க்க வரும் போது நீ வரைந்த ஓவியத்துடன் வா’ என்றார்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம், இனி வேண்டவே வேண்டாம் என தூக்கி போட்ட ஓவியத்தை எப்படி மீண்டும் தொடர்வது என்ற அச்சமும் இருந்தது. நானும் என் கணவரும் பல ஆன்மீக தலங்களுக்கு சென்றதால், எனக்கு கடவுள்களின் சித்திரத்தில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. முதலில் கேரளா முரல் பெயிண்டிங் முறையில் அர்த்தநாரீஸ்வரரை வரைந்தேன். அப்படியே தொடர்ந்து பல கடவுள்களின் உருவங்களை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் புதுமையாகவும் அதே சமயம் தெய்வீக தன்மையுடன் வரைந்து இன்ஸ்டாவில் பதிவு செய்தேன். கடவுள் ஓவியம் என்பதால் ஓரளவிற்கு ஆர்டர் வந்தது. என் மகிழ்ச்சிக்காகவும் ஆத்ம திருப்திக்காகவும் மட்டுமே வரைந்தேன். ஒரு முறை இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர் ஒருவர், சரஸ்வதியை வரைந்து கொடுக்க சொல்லி இருந்தார். சரஸ்வதியின் அடையாளம் வீணை, தாமரை, அன்னம் என்பதால், என் கற்பனையில் அழகான சரஸ்வதியை உருவாக்கினேன். அந்த சமயத்தில் எனக்கு குழந்தை பிறந்திருந்ததால், சில காலம் ஆர்டர்களை எடுக்காமல் இருந்தேன். அப்போது ஒரு பால திரிபுரசுந்தரியின் தீவிர பக்தர். அந்த ஓவியத்தை வரைந்து கொடுக்குமாறு கேட்டார். ஆனால் பால திரிபுரசுந்தரி ஓவியத்தை பக்தர்கள் கேட்டு எனக்கு மறுக்க மனமில்லை. ஓவியத்தை நிச்சயம் வரைய வேண்டும் என முடிவு செய்தேன். குழந்தையையும் கவனிக்க வேண்டும் என்பதால், இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க நிறைய நாட்கள் ஆனது. இருந்தாலும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று உறுதியுடன் அதற்கான வேலையில் ஈடுபட்டேன். நூற்றுக்கணக்கான திரிபுரசுந்தரியின் அழகான ஓவியங்களை தேடினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தாலும், மழலையும் ஆத்மார்த்தமான ஆன்மீகத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை. அதனால், என் ஓவியத்தில் நிச்சயம் அந்த மழலைத்தனம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை மனதில் வைத்துக்கொண்டு வரைந்தேன். ஒரு ஓவியம் இப்படித்தான் வரப்போகிறது என்று ஆரம்பத்திலேயே எனக்கு தெரியாது. எல்லாம் என் கற்பனையை பொறுத்து, எனக்கு திருப்தி கிடைக்கும் வரை ஓவியத்தின் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் மீண்டும் வரைவேன். ஆனால் ஒரு நாள் திடீரென அந்த ஓவியம் முழுமை பெற்றுவிடும். திரிபுரசுந்தரி ஓவியத்திலும் அது தான் நிகழ்ந்தது. நான் வரைந்த ஓவியத்தை தான் அவர்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இந்த வெற்றியெல்லாம் ஏதோ ஒரே ஓவியத்தில் ஒரே நாளில் கிடைத்தது போல தோன்றலாம். ஆனால் நான் ஓவியமே வேண்டாம் என்று ஒதுக்கி, பல கடினமான உழைப்புக்கு பின்னர் தான் இந்த பாராட்டுகளை பார்க்க முடிந்தது. இந்த வெற்றியிலும் ஒரு சின்ன பயம் இருக்கிறது. இதை விட நன்றாக வரைய வேண்டுமே என்று. அதற்காக நான் வரைந்தது தான் லஷ்மி தேவியின் ஓவியம். சரஸ்வதியும் லஷ்மியும் ஒன்றாக இருந்தால், நான் எப்போதுமே சரஸ்வதியை வணங்கிவிட்டு செல்வேன். அதனால் தான் எனக்கு படிப்பிலும் சரி, ஓவியம் மற்றும் வேறு சில திறமைகளை அவள் அருளி இருக்கிறாள் என்று நம்பிக்கை. இப்போது எனக்கு லஷ்மியின் அருளும் தேவைப்படுகிறது. ஓவியம் வரைய அதற்கான முதலீடும் வருமானமும் தேவை. அதனால் லஷ்மி தேவியின் அருளை வேண்டி அந்த ஓவியத்தை வரைந்தேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லும் தான்யா கடவுளின் ஓவியங்களை வரைவதற்கு முன் அதன் மொத்த விவரங்களையும் சேகரித்த பிறகுதான் வரைய தொடங்குவாராம். ‘‘என் ஓவியங்கள் கலைப் பொருளாக மட்டும் இல்லாமல் பலர் தங்கள் பூஜை அறையிலும் வைத்து பூஜிக்கிறார்கள். கடவுள் ஓவியங்களை வரையும் போது முடிந்தவரை ஆன்லைனிலும், சிறப்புமிக்க கோவில்களுக்கு சென்று அங்கிருக்கும் குருக்களை சந்தித்து அவர்களிடமும் கடவுளை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம். எந்த கையில் என்ன இருக்க வேண்டும். கால்கள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வேன். அதன் பிறகு, இந்த நவீன காலத்திற்கு ஏற்ப சில மாற்றம் அமைத்து வரைவேன். என்னுடைய ஓவியங்களைப் பார்த்து ஒருவர், தன் கனவில் கடவுளும் இதே உருவத்தில் வந்ததாகவும், அவர் உங்கள் கனவிலும் அப்படி வந்தாரா, அதனால் தான் அதை அப்படியே வரைய முடிந்ததா என்றெல்லாம் கேட்டிருக்கிறார். எனக்கு ஒரு ஓவியம் வரைந்து முடிக்கும் வரை அது எப்படி வரப் போகிறது என்று தெரியாது. தற்போது நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. அதனால் நான் வரைந்த ஓவியங்களை அச்சிட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அச்சிடப்பட்ட பிரதிகள் தானே என்று கவனக்குறைவுடன் இல்லாமல், அந்த அச்சிடப்பட்ட ஓவியங்களும் 100-200 ஆண்டுகள் நீடித்து நிற்க வேண்டும் என உயர் ரக இங்க் பயன்படுத்தி தரமான giclee எனப்படும் அச்சில் உருவாக்குகிறேன். இந்த அச்சுகள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மங்காது.  சொல்லப்போனால் நாட்கள் ஆக ஆக, இதன் அழகும் கூடிக்கொண்டே போகும். இந்த அச்சுகள் நாலாயிரம் ரூபாயில் தொடங்கி அளவைப் பொருத்து விலையும் கூடும்” எனக் கூறும் தான்யா, தொடர்ந்து ‘‘ஓவியங்கள் வரைய வேண்டும் என்பதை தாண்டி பெரிய கனவுகள் எல்லாம் இல்லை. இந்த கலைக்காக என்னை ஒப்படைத்துவிட்டேன். அது என்னை எந்த வழியில் அழைத்து செல்கிறதோ அந்த பாதையில் பயணிக்க போகிறேன். என் ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த வேண்டும் என்பது மட்டும் ஒரு சின்ன ஆசையாக இருக்கிறது. அதற்கான அடுத்தக்கட்ட ஓவியங்களை வரையத் தயாராகி வருகிறேன். பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததும் வீட்டில் அம்மாவுக்கு தான் அதிக வேலை இருக்கும். ஆனால் என் கணவரும், குடும்பமும் சேர்ந்து என் ஓவியங்களுக்கு ஆதரவாய் இருப்பதால் தான் இந்த முக்கியமான சூழ்நிலையிலும் என் ஓவியத்தையும் குழந்தையையும் என்னால் சமமாக கவனிக்க முடிகிறது” என்று முடிக்கிறார்.தொகுப்பு: ஸ்வேதா கண்ணன் படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

fifteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi