பூச்சி மருந்துகளை சரியான அளவில் தெளிப்பதால் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம்

பொன்னமராவதி : பூச்சி மருந்துகளை சரியான அளவில் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன. குளவிகள், பொறி வண்டுகள், தரை வண்டுகள், நாவாய் பூச்சி, தேனீக்கள் போன்ற பூச்சிகள் பயிரைக் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை அழித்து நன்மை அளிக்கின்றன. இவை நன்மை செய்யும் பூச்சிகள் என அழைக்கப்படுகின்றன. பொறி வண்டுகள் அசுவினி பூச்சியை உண்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. குளவிகள் பச்சைக்காய் புழுக்களை பிடித்து வந்து அதன் கூட்டுக்குள் போட்டு அந்தப் புழுக்களின் மீது தனது முட்டைகளை இட்டுவிடும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு பச்சை காய் புழு தான் உணவு.எனவே இந்தப் புழுக்கள் கூட்டிலேயே முழு வளர்ச்சி அடைந்து வளர்ந்து குளவியாக வெளிவரும். சில பூச்சிகள் மற்ற பூச்சிகளை கொன்று உண்டு வாழ்கிறது. அதை இறை விழுங்கிகள் எனப்படும். ஒரு சில பூச்சிகள் மற்ற பூச்சிகளின் புழுக்கள் மீது முட்டையிட்டு அவற்றை அழிக்கிறது இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கும் முறை: இயற்கை எரு, கம்போஸ்டு, மண்புழு உரம், உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம்) பசுந்தாள் உரங்கள் (கொழுஞ்சி, தக்கைப்பூண்டு, சணப்பு ) முதலியவற்றை பயன்படுத்தி மண்ணில் வாழும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயல் வரப்புகளில் உள்ள கிணற்றடிப்பூண்டு அல்லது வெட்டு காயத்தலை போன்ற செடிகள் நன்மை செய்யும் பூச்சிகளை கவரும் தன்மை கொண்டவை. எனவே இவற்றை அழிக்காமல் விட்டு வைக்க வேண்டும். வயலில் பறவை இருக்கைகள் குடில்கள் அமைக்க வேண்டும். நெல் பயிருக்கு வரப்புகளில் பயறு வகைச் செடிகளான தட்டை பயிறு, உளுந்து போன்ற பயிர்களை பயிரிட வேண்டும் அல்லது சூரியகாந்தி முதலியவற்றை விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கவேண்டும். கரும்பு சாகுபடிக்கு அதன் கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மண் வாழும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் பொருளாதார சேத நிலைஅறிந்து தாவரம் சார்ந்த பூச்சி மருந்துகள் நுண்ணியிர் பூச்சி கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். பூச்சி மருந்துகளை சரியான அளவில் தெளிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கலாம். இம் முறையினால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி பயிர் பாதிப்படைவதைத் தடுக்கலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்