புல்லட் ரயில் திட்டம் நிலத்துக்கு வழங்கிய நஷ்டஈடுக்கு வருமான வரி வசூலிக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மும்பை:  ‘புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு  வழங்கப்படும் நஷ்டஈடு தொகைக்கு வருமான வரி வசூலிக்க முடியாது,’ என்று  மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மும்பைக்கும் குஜராத் மாநிலத்தின்  அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு  வருகிறது. இந்த திட்டத்துக்கு மும்பை முதல் அகமதாபாத் வரை தேசிய அதிவேக  ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எச்.எஸ்.ஆர்.எல்)  நிறுவனம் நிலத்தை  கையகப்படுத்துகிறது. பிவண்டியில சீமா பாட்டீல் என்பவரின் நிலம்  கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அவருக்கு நஷ்ட ஈடும் வழங்கியபோது,  வருமான வரி தொகையை கழித்து பின்னரே நஷ்டஈடு வழங்கப்பட்டது. வருமான வரி  விதிக்கப்பட்டதை எதிர்த்து சீமா பாட்டீல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிபதிகள் கங்காபூர்வாலா, எம்.ஜி.சேவ்லிகர் அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, என்.எச்.எஸ்.ஆர்.எல்.  நிறுவனம் சார்பில் வாதிட்ட வக்கீல், ‘புல்லட் ரயில்  திட்டத்துக்கு சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்தின் பேரில் நிலம்  கையக்கப்படுத்தப்பட்டது. இதற்கான நஷ்டஈடு வழங்கும்போது வருமான வரி  சட்டப்படி வருமான வரி வசூலிக்கப்பட்டது,’ என தெரிவித்தார்.பின்னர், நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ‘பொது திட்டத்துக்கு மக்கள்  சம்மத்துடன் கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான நஷ்டஈடு தொகைக்கு வருமான  வரி விதிக்க முடியாது.  புல்லட் ரயில் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட  நிலத்துக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு தொகைக்கு வருமான வரித் தொகையை  பிடித்தம் செய்ய முடியாது என்று திருத்தம் செய்யப்பட்ட அறிக்கையை  என்எச்எஸ்ஆர்எல் நிறுவனம் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க  வேண்டும்.  வருமான வரித்துறையினரும் நஷ்டஈட்டுத் தொகையில் கழிக்கப்பட்ட  வருமான வரியை மனுதாரருக்கு திருப்பி கொடுக்க வேண்டும். பின்னர், அதற்கான  அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்….

Related posts

ஆந்திராவில் 2 இடங்களில் விபத்து; பக்தர்கள் உள்பட 7 பேர் பலி

திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை

ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு