புறநகர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குத்தகை என்ற பெயரில் ரூ.10 கோடி மோசடி 150க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி திருவள்ளுவர் சாலையில், அசோசா என்ற பெயரில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்குகிறது. இங்கு வீடுகளை குத்தகைக்கு விடுவது, பணம் பரிமாற்றம் உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் காலியாக உள்ள வீட்டின் உரிமையாளர்களிடம் பேசி, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, அதனை பொதுமக்களுக்கு இந்நிறுவனத்தினர் குத்தகைக்கு விட்டனர். இதற்கு ரூ.3 லட்சம்  முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னை புறநகர் பகுதிகளான மணிமங்கலம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்து, அதன் உரிமையாளர்களிடம் மாத வாடகை நிர்ணயம் செய்து, 11 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்து மாதம் ரூ.10 ஆயிரம் வரை வாடகை தருவதாக இந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர். பின்னர், வீட்டு உரிமையாளர்களுக்கு மாதாமாதம் வாடகை கொடுத்துவிட்டு, அசோசா நிறுவனம் அந்த வீடுகளை வருடாந்திர குத்தகைக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேசி, சுமார் 1000க்கும்  மேற்பட்ட பொதுமக்களிடம் பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்தால், பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோர், நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து, மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இதுவரை, சுமார் ரூ.10 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறினர். இதையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த அறிவுநம்பி என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்ததும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.தொடர்ந்து, போலீசார் தலைமறைவான அறிவுநம்பியை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், தென் மாவட்டங்களில் இருந்து வந்து, புறநகர் பகுதிகளில்  தங்கி வேலை செய்பவர்களாகவும் இருப்பதால், அவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு