புனித தோமையார்மலை ஒன்றிய ஊராட்சிகளில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி உடற்பயிற்சி கூடம்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசுகையில், ‘சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையார் மலை ஒன்றியத்திற்குட்பட்ட  மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், நன்மங்கலம்,  சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய 7 ஊராட்சிகள் மாநகருக்கு ஈடாக வளர்ந்து வருகிறது. இந்த ஊராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நவீன  உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும்’ என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: வேங்கைவாசலில் ஏற்கனவே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. அதேபோல பெரும்பாக்கம், மேடவாக்கம் மற்றும் கோவிலம்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகளில் உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி இருக்கிறது. இனிவரும் நிதியாண்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, ‘நமக்கு நாமே திட்டம்’ போன்ற திட்டங்களின் மூலம் உடற்பயிற்சி கூடம் அமைக்கலாம். ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக முயற்சி செய்து, மூன்றில் ஒரு பங்கு பொதுத்தொகையை செலுத்தினால் போதும்.ஒருவேளை ஆதி திராவிடர் பகுதிகளில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட விரும்பினால், 5ல் ஒரு பங்கு தொகையை செலுத்தினால் போதும். நன்மங்கலம் ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க போதிய இடம் இன்னும் அமையவில்லை. ஆகவே, உறுப்பினர் குறிப்பிட்ட வேங்கைவாசல், பெரும்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய 7 ஊராட்சிகளிலும் எதிர்காலத்தில் உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பதற்கு நிச்சயமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி