புனித்துக்கு கர்நாடக ரத்னா விருது; நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்

பெங்களூரு: பெங்களூரு  விதான சவுதாவில்,  மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார். கர்நாடக ரத்னா பதக்கத்தை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் நடிகர்  ரஜினிகாந்த் வழங்கினார். நடிகர்கள் சிவராஜ் குமார், ஜூனியர்  என்டிஆர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது:நடிகர் அப்புவை சிறுவயதில் சென்னையில்  சந்தித்தேன். தலைமை குருசாமி நடிகர் நம்பியார் சபரிமலைக்கு எங்களை அழைத்து  செல்வது வழக்கம். வீரமணியின் கணீர் குரலில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்று கோஷம் எழுப்பியபோது, ஒரு சிறுவனின் குரல் எங்களை கவர்ந்தது. கிருஷ்ணன் போல் இருந்த அந்த சிறுவன் யார் என்று விசாரித்தபோது, நடிகர் ராஜ்குமாரின் மகன் என்று தெரியவந்தது. ராஜ்குமார் தனது மகன் புனித் ராஜ்குமாரை அவரது தோளில்  48 கி.மீ சுமந்து சென்றார். அந்த சிறுவன் சினிமாவில் நடித்தபோது ராஜ்குமார் எனக்கு அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து படம் பார்த்தபோது, 100 நாட்கள் ஓடி நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொன்னேன். அதுபோல், 100வது நாள் விழாவிலும் கலந்துகொண்டேன். புனித் ராஜ்குமார் இறந்த  தகவல் எனக்கு 3 நாட்கள் கழித்தே தெரியவந்தது. நான் ஐசியூவில் இருந்த காரணத்தால்  எனக்கு இந்த விஷயம் உடனே தெரிவிக்கப்படவில்லை. அந்த தகவல் கிடைத்தபோது என்னால் நம்ப  முடியவில்லை.  21 வயதில் 35 படங்களில் நடித்தது மட்டுமின்றி, பல லட்சம்  குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து, மிகப்பெரிய மனிதநேயம் மிகுந்தவராக அவர்  திகழ்ந்துள்ளார். நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ராஜ்குமார்  உள்ளிட்டோர் பல்வேறு வேடங்களில் நடித்து 60, 70 வருடங்களுக்குப் பிறகு  மக்களின் அன்பை பெற்றனர். அதுபோல் என்.டி.ஆர்., ஆந்திராவிலுள்ள அனைத்து வீடுகளிலும் ராமர், கிருஷ்ணர் என்று வணங்கப்பட்டு வருகிறார். ஆனால், நடிகர்  அப்பு குறுகியகாலத்தில் சினிமாவில் மட்டுமின்றி, கர்நாடக மக்களின்  மனதிலும் நிரந்தரமாக இடம்பிடித்து அமரர் ஆகிவிட்டார். புராண காலங்களில்  பேசப்படும் மார்க்கண்டேயன், பிரகலாதன் வரிசையில் புனித் ராஜ்குமார் இடம்பிடித்துள்ளார். கலியுகத்தில் பிறந்த தேவகுழந்தை அப்பு என்று சொல்வது  சிறப்பானதாகும். கர்நாடக ரத்னா விருது நடிகர் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டபோது, மழையின் ஆசிர்வாதம் கிடைத்தது. அதுபோல், இப்போதும்  மழை வந்துள்ளது. நிஜலிங்கப்பா, குவெம்பு உள்ளிட்ட பெருந்தலைவர்கள் வரிசையில் கர்நாடக ரத்னா விருது புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னை வாழ வைக்கும் தமிழர்களும் இங்கு அதிகமாக வந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் ரஜினிகாந்த் பேசினார்….

Related posts

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!

ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி

உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து விடுதலையானார் ஹேமந்த் சோரன்..!!