புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினாவில் தொலைந்து போன 17 குழந்தைகள் உட்பட 20 பேர் மீட்பு: போலீசாருக்கு பெற்றோர் வாழ்த்து

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலில் காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆங்கில புத்தாண்டை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து கொண்டாடினர். கூட்டம் அதிகளவில் இருந்ததால், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுதவிர மெரினா உழைப்பாளர் சிலை அருகில் 2 தற்காலிக கட்டுப்பாட்டறைகள், கடற்கரையில் 4 தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் என மொத்தம் 20 பேர் திடீரென தொலைந்து போயினர். அவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் படி, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் மாயமான 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் புகைப்படத்துடன் அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து சென்ற 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்களை போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளை கண்டுபிடித்த போலீசாருக்கு அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்