புது வகை கொரோனா பரவல் மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் புது வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்ததைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.  சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பிஎப்.7 எனும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் புகுந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மக்கள் மாஸ்க் அணிய வேண்டுமெனவும், நெரிசலான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்களும், அந்தந்த மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தனர். இவற்றை கேட்டறிந்த ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கண்காணிப்பு மற்றும் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தினார். மேலும், மாநில அரசுகள் எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி, அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்களை போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதிப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, கொரோனா அவசரகால ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த பயிற்சி நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் கவனம் செலுத்தி தேவையான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, கொரோனா சோதனையை அதிகரிக்கவும், பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா ரேண்டம் பரிசோதனை நடத்தும் உத்தரவும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேரிடம் ரேண்டம் சோதனை நடத்தப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 2 ஆண்டாக 91 நாடுகளில் டம்மியாக இருந்த பிஎப்.7: சீனாவில் புதிய கொரோனா அலைக்கு காரணமான ஒமிக்ரானின் புதிய பிஎப்.7 உருமாற்ற வைரஸ் மீதுதான் தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், சுமார் 2 ஆண்டாக 91 நாடுகளில் பிஎப்.7 உருமாற்ற வைரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளது. முதல் முறையாக இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொரோனா வைரஸ் மரபணு வகைகளில் வரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. உலக அளவில் கொரோனாவை பரப்பியதில் பிஎப்.7ன் பங்கு 0.5 சதவீதம் மட்டுமே. இதற்கு முந்தைய ஒமிக்ரான் வகைகளான எக்ஸ்பிபி, பிக்யூ.1.1 போன்றவை கூட பல நாடுகளில் லேசான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பிஎப்.7 வகையால் அச்சுறுத்தல்கள் தேவையற்றது என்கின்றனர் வைராலஜி நிபுணர்கள். அதே சமயம் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.தொற்று சதவீதம் தொடர்ந்து சரிவு: புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாட்டில் கொரோனா தொற்று விகிதம் வாரந்தோறும் சரிந்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் தொற்று விகிதம் 0.14 சதவீதம் மட்டுமே. சராசரியாக தினசரி 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் ஒருவருக்கு கூட தொற்று பரவவில்லை. உலக அளவில் மிகக் குறைவான தொற்று விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 163 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்துள்ளோர் எண்ணிக்கை 3,402ல் இருந்து 3,380 ஆக சரிந்துள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு