புதுவை அரசு ஊழியர்களுக்கு ₹7 ஆயிரம் தீபாவளி போனசாக அறிவிப்பு

புதுச்சேரி, அக். 19: புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்கள் மற்றும் குரூப்-சி ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2024ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023-24ம் ஆண்டிற்கு உற்பத்தி திறன் அல்லாத இணைக்கப்பட்ட தற்காலிக (அட்-ஹாக்) போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் ஊழியர்களின் 30 நாட்கள் ஊதியத்திற்கு சமமான இந்த போனஸ் அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை வெளியிட்டது. இந்த போனசை பெறுவதற்கு அரசிதழ் பதிவு பெறாத குரூப்-பி மற்றும் குரூப்-சி ஊழியர்கள் தகுதியானவர்கள். போனசுக்கு தகுதி பெற ஊழியர்கள் மார்ச் 31ம் தேதி 2024ல் பணியில் இருந்திருக்க வேண்டும்.

மேலும், வருடத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியான சேவையை முடித்திருக்க வேண்டும். முழு வருடத்திற்கும் குறைவாக பணியாற்றிய பணியாளர்கள் பணிபுரிந்த மாதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விகிதச் சார்பு போனசை பெறுவார்கள். போனஸ் தொகையானது சராசரி ஊதியத்தை 30ஐ 4ல் வகுத்து, அதை 30 நாட்களால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு ஊழியரின் மாத ஊதியம் ரூ.7 ஆயிரம் என்றால், அவரது போனஸ் தோராயமாக ரூ.6,908 ஆக இருக்கும். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 240 நாட்கள், தொடர்ந்து 3 ஆண்டுகள் வேலை செய்த சாதாரண தொழிலாளர்களும் இந்த போனசுக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடைய போனஸ் மாதம் ரூ.1,200 என்ற அளவில் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் சம்பள முறையை பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் பணிபுரியும் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்கள் மற்றும் குரூப்-சி ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை துணை செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல் அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையில் 18ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி