புதுச்சேரி அருகே ₹15 கோடி மதிப்பிலான மணக்குள விநாயகர் கோயில் நிலம் அபகரிப்பு

புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரியில் சமீப காலமாக பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் நிலங்கள் மற்றும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து மோசடி கும்பல் போலி பத்திரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை காமாட்சியம்மன் கோயில் நிலப்பிரச்னை பூதாகரமாக வெடித்து சார்பதிவாளர் உட்பட 13 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் போலியாக பதியப்பட்ட பத்திரங்களையும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற நிலையில் புதுவையில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களுக்கு சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து அறங்காவல் குழுக்களுக்கே தெரியாமல் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய விஜிலென்ஸ் அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பது குறித்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகளிடமிருந்து ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள், அதன் தற்போதைய நிலைமை, யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்? என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அதிர்ந்து போன கோயில் நிர்வாகிகள் தங்களது கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறியும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 62 குழி நிலம் வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ளது. இந்த இடத்தின் பக்கத்தில் உள்ள நிலத்தில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு மணக்குள விநாயகர் கோயில் நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

ஆகையால் மனைப்பிரிவு அமைத்தவர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளனர். இதுசம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை மீட்டு தரவேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை, வருவாய்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, வில்லியனூர் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தனர். அதனடிப்படையில் வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த இடம் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசபெருமாள் என்பவர் அனுபவித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை அழைத்து பேசியதில் அவர் இந்த இடம் மணக்குள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடம்தான். இதில் நான் பயிர் செய்து வந்தேன். தற்போது இந்த இடத்தை நான் மீண்டும் கோயிலிடேமே ஒப்படைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த இடத்தை கோயில் நிர்வாகிகள் மீட்டு இடத்தை சுற்றிலும் மதில்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் மனைப்பிரிவு போட்டுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர்.

மத்திய விஜிலென்ஸ் அதிகாரிகள் இதுசம்பந்தமான ஆவணங்களை சேகரித்து கோயில் நிலத்தை மீட்பது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதே போன்று தவளக்குப்பம் பகுதியில் உள்ள 136 குழி இடத்தை 1995ம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்து 3 பேர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ேகாடியாகும். இந்த இடத்தின் பட்டா மணக்குள விநாயகர் கோயில் பெயரில் இன்றளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையும் மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலி பத்திரம் பதிந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை