புதுச்சேரியில் மனைவி விபசார வழக்கில் கைதானதால் 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை 2 மாநில போலீசார் விசாரணை மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம், ஜூலை 13: மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தையிடம் 2 மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33), இவர் தற்போது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்தவேலின் மனைவி கவுசல்யாவை புதுவை மாநில போலீசார் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆனந்தவேலு ஜோவிதா (4) மற்றும் 18 மாத குழந்தையான சஸ்மிதா ஆகிய 2 பெண் குழந்தைகளையும் கடந்த 10ம் தேதி அழைத்துக் கொண்டு கூனிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆனந்தவேலு வெளியில் சென்றுள்ளார்.

ஆனால், அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை இறந்த நிலையில் குழந்தை சஸ்மிதா உடல் கூனிமேடு கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இதேபோல் ஜோவிதா உடல் அனுமந்தை குப்பம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று இரண்டு உடல்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளையும் கடலில் வீசிவிட்டு தானும் கடலில் குதித்து ஆனந்தவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குழந்தைகளை மட்டும் கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கினர்.

அப்போது மாயமான ஆனந்தவேலுவை கண்டுபிடிக்க அவரது செல்போன் டவரை பயன்படுத்தி இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போன் டவர் தொடர்ந்து காலாப்பட்டு பகுதியை காட்டியுள்ளது. இதனால் அவரை உடனடியாக கண்டுபிடிக்க தமிழக போலீசார் மற்றும் புதுவை மாநில போலீசாரும் சேர்ந்து தேடினர். இந்நிலையில் தன்னை போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட ஆனந்தவேலு நேற்று மதியம் மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆனந்தவேலு அவர் குடும்பத்துடன் இருந்த காலாப்பட்டு பகுதி புதுவை மாநில எல்லைக்குட்பட்டது. இதேபோல் இரண்டு குழந்தைகள் உடல் கரை ஒதுங்கிய இடங்கள் தமிழக பகுதியான மரக்காணம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது.

இதனால் ஆனந்தவேலுவின் மீது எந்த மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்துவது என எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்த ஆனந்தவேலுவிடம் இரண்டு மாநில போலீசாரும் தங்களது உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி தற்போது விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த விசாரணைக்கு பின்தான் எந்த காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்வது என்பது தெரியவரும்.

Related posts

சீட் திட்டத்தில் பயன்பெற சீர் மரபினர் விண்ணப்பிக்கலாம்

பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ராஜபாளையம் அருகே காற்றின் வேகத்தால் கடல்போல் காட்சியளிக்கும் கண்மாய்