புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டம் பெரியார் திக- இந்து முன்னணி மோதல் கல்வீச்சில் எஸ்ஐ உட்பட 3 பேர் காயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டத்தின்போது தந்தை பெரியார் திகவினருக்கும், இந்து  முன்னணியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த  கல்வீச்சு, தடியடி சம்பவத்தில் எஸ்ஐ உள்பட 3 பேர் காயமடைந்தனர். புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், நேற்று காலை மனுதர்ம சாஸ்திர நகல்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். ஒன்றிய அரசின் வெப்சைட்டில் உள்ள மனுதர்ம  சாஸ்திரத்தை நீக்க வேண்டும். உடனே தடைசெய்ய வேண்டுமென கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம்  காமராஜர் சாலை- அண்ணா சாலை சந்திப்பில் இந்து முன்னணியினர்  மற்றும் பாஜக நிர்வாகிகள் பேரணியாக திரண்டுவந்து எதிர்போராட்டத்தில்  ஈடுபட்டனர். தந்தை பெரியார் திகவினர் போராட்டத்துக்கு எதிராக  முழக்கமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது மனுதர்ம சாஸ்திர நகலை தந்தை பெரியார் திகவினர் கொளுத்த முயன்றனர். உடனே இந்து முன்னணி அமைப்பினர் கருங்கற்களை, செருப்புகளை வீசியெறிந்து தடுக்க  முயன்றனர். மேலும் அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல்  நடத்தினர். இதில் போலீஸ் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பதிலுக்கு அவர்கள் வீசிய கற்கள், செருப்பை எடுத்து தந்தை  பெரியார் திகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் பக்கெட்டில்  இருந்த தண்ணீரை வீசிறியெறிந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறி பதற்றமான சூழல் ஏற்பட்டது. கிழக்கு எஸ்பி வம்சித ரெட்டி தலைமையிலான போலீசார் இருதரப்பினர்  மீதும் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இந்த மோதலில் எஸ்.ஐ. குமார், இந்து முன்னணி முருகையன் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தந்தை  பெரியார் திகவினர் 30க்கும் மேற்பட்டோரை போலீசார்  வலுக்கட்டாயமாக கைது செய்து கரிக்குடோனுக்கு அழைத்துச் சென்றனர். இந்து முன்னணியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். காயமடைந்த இந்து முன்னணி நிர்வாகியை சபாநாயகர் செல்வம் பார்த்து ஆறுதல் கூறினார். …

Related posts

காலி மதுபாட்டிலை திரும்பப்பெறும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி ஏன்? தொகுதி வாரியாக எடப்பாடி ஆலோசனை: வரும் 10ம் தேதி முதல் நடத்துகிறார்

நிலஅளவை, நில ஆவணங்கள் இணையவழி சேவை விவரம்: பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதி