புதுச்சேரியில் பயங்கரம் தம்பதி தகராறை தட்டிக்கேட்ட முன்னாள் அரசு ஊழியர் அடித்து கொலை 2 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, ஜூன் 10: மதுரை மாவட்டம் கீரத்துரை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(22). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி மனைவியும், 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தினேஷ்குமார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மேல் தளத்தில் மதுரை மாவட்டம் கீரத்துரை பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்பவர் வசித்து வருகிறார்.தினேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார்.

அப்போது மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு மனைவியை அடித்துள்ளார். அப்போது பைசல் வீட்டின் வெளியே நின்றிருந்தார். கணவரின் அடி தாங்க முடியாமல் மனைவி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது, இவர்களது எதிர் வீட்டில் வசித்து வரும் அரசு சார்பு நிறுவனமான பாண்லே முன்னாள் ஊழியர் ரவி (56) என்பவர், சத்தம் கேட்டு எழுந்து வந்து, பெண்ணை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்? என்று தினேஷை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தினேஷுக்கு ஆதரவாக ைபசல், ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் பைசல் ஆகிய இருவரும் சேர்ந்து, கீழே கிடந்த கட்டையை எடுத்து ரவி தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவி மயங்கி சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ராமதீர்த்தம் என்பவரையும் இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரவி மற்றும் ராமதீர்த்தம் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமதீர்த்தம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த கோரிமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து தினேஷ் மற்றும் பைசலை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு