புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு?.. அதிகாரிகளுடன் கவர்னர், முதல்வர் இன்று மாலை ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியிலும் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பு செய்வது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலையின் வேகத்தை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. புதுச்சேரியிலும் கடந்த ஒரு மாதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பும், இறப்பும் கடந்த வாரங்களில் அதிகமாக இருந்த நிலையில் தளர்வுகளில் நேரம் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக இறப்பும், பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகின்றன.இருப்பினும் அரியாங்குப்பம், வில்லியனூர், லாஸ்பேட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி இறப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் மேலும் ஒருவாரம் ஊரடங்ைக நீட்டிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதுபற்றி சுகாதார துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இன்று மாலை ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கூட்டத்தில் அடுத்த ஊரடங்கு காலத்தில் கூடுதலாக தளர்வுகளை அளிக்கலாமா அல்லது இதே நிலையை தொடர்வதா என்பது பற்றி ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.மேலும் அரசுக்கான வருவாயை ஈட்டித்தரும் கலால் உள்ளிட்ட சில துறைகளுக்கு ஊரடங்கில் சற்று தளர்வு அளிப்பது பற்றியும் இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘தொற்று பாதிப்பு முழுமையாக குறையவில்லை. ஆறுதல் அளிக்கும் விதமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை இறங்கு முகத்தில் உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு தொடர்வதால், நாமும் அதை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த முடியும். இதுபற்றி மாநில அரசிடம் கட்டாயம் பரிந்துரைக்கப்படும்’ என தெரியவந்துள்ளது….

Related posts

பெட்ரோல் குண்டு வீச்சில் சப் இன்ஸ்பெக்டர் காயம்

சென்னை பீச்-காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு ஒகேனக்கல்லுக்கு 1.65 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.15 அடி