புதிய பாலம் அமைப்பதற்காக பனைமரங்கள் வெட்டி கடத்தல்

ஆத்தூர், மே 13: ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலையிலிருந்து தெடாவூர் பேரூராட்சிக்கு செல்லும் சாலையில் இருந்த தரைப் பாலத்தை அகற்றிவிட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி ₹2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப் பாலம் அமைக்கப்படும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருக்கின்றன. பாலம் அமைக்கப்பட்டால் பனை மரங்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பனை மரங்களை அகற்றக்கூடாது, பாலத்தை சற்று தள்ளி பாதிப்பு இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்த பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் பனைமரம் வெட்டப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பனைமரத்தை வெட்டி கடத்தியவர்கள் யார் என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் நீண்ட காலமாக பலன் தந்த பனைமரம் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளது. மேலும் வெட்டியது யார் என்பதை கூட விசாரணை நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் எதிராக அமைந்துள்ளது. பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதற்கு எதிராக செயல்பட்டவர் யார் என்பது குறித்து உடனடியாக மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி பனை மரங்களை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து