Thursday, August 1, 2024
Home » புட் ஸ்டைலிங்கில் கலக்கும் பெண் போட்டோகிராபர்

புட் ஸ்டைலிங்கில் கலக்கும் பெண் போட்டோகிராபர்

by kannappan

உணவின் புகைப்படம் நமது  உணர்வைச்  சுண்டியிழுத்து நாவில் சுவை ஊற வைக்கிறது என்றால் அது நேர்த்தியாக  எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தின் திறமையே. அந்தவகையில், உணவுகள், உணவு சார்ந்த பொருட்களின் விளம்பரத்துக்காக புட் போட்டோகிராபி செய்து தரும் பிரிஸ்ஸி கைதேர்ந்தவர். அவரது புகைப்படம் ஒவ்வொன்றும் சுவையை தூண்டி கவர்ந்திழுக்கக் கூடியவை. பிரிஸ்ஸி நம்முடன் பகிர்ந்துகொண்டவை: “பூர்வீகம் வேலூர் பக்கம் ராணிப்பேட்டை. சின்ன வயசுல இருந்தே எங்கள் வீட்டில் அப்பா, மாமா இருவரும் ஸ்டில் கேமரா வைத்திருந்தார்கள். அப்போதிலிருந்தே எனக்கு கேமராமீது  ஓர் ஈர்ப்பு உண்டு. அப்பாவோட கேமராவை எடுத்து எதையாவது படம் பிடித்துக் கொண்டிருப்பேன்.  இந்நிலையில், நான் கல்லூரிப் படிப்புக்காக  சென்னை வந்தேன். அப்போ, அப்பா சொன்னார், ‘நீ  கல்லூரியில் நல்ல  மார்க் எடுத்தால்  உனக்கு டிஜிட்டல் கேமரா  வாங்கித் தருகிறேன் என்று. அதுக்காகவே, நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தேன். அப்பாவும் சொன்னமாதிரியே எனக்கு  டிஜிட்டல்  கேமரா வாங்கிக் கொடுத்தார். அதன்பின்னர், கண்ணில்  படுவதையெல்லாம் படம் பிடிக்கத் தொடங்கினேன். இதற்கிடையில், கல்லூரி முடித்து ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர், என் சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்து ஒரு டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கினேன். அதைவைத்து, பூ. செடி, கொடிகள், ஊர்வன, பறப்பன எல்லாவற்றையும்  படம் எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் வைல்ட் லைப் போட்டோகிராபி பிடித்துப்போக, அலுவலக டென்ஷன் குறைவதற்காக அவ்வப்போது கேமராவை எடுத்துக் கொண்டு வீக்எண்ட்டில் எங்காவது ஷூட்  செய்ய சென்றுவிடுவேன். அப்படிப் போகும்போது, பறவைகளைப் படம் பிடிப்பது மிகவும் பிடித்துவிட்டது. இதனால் 2008 லிருந்து 2018 வரை பறவைகளின்  லைப் ஸ்டைலை படம் பிடித்து வைக்கத் தொடங்கினேன்.அதன்பின்னர், வேலைப்பளு தாங்கமுடியாமல், ஐடி வேலையை விட்டுவிட்டு, முழுதாக போட்டோகிராபியில் இறங்கினேன். அதுவரை படம்  பிடிப்பேனே தவிர, முழுமையான  போட்டோகிராபி எனக்கு  தெரியாது. அதனால், போட்டோகிராபியில் பிரபலமாக இருக்கும் புகைப்படக்காரர்கள் நடத்தும் ஒர்க் ஷாப்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன நுணுக்கங்களையெல்லாம் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அந்தவகையில், பிரபலமாக இருந்த வைல்ட் லைப் புகைப்படக்காரர்களான சுதிர் சிவ்ராம், சரவணன் சுந்தரம் போன்றோர் நடத்திய  ஒர்க் ஷாப்பில் எல்லாம் கலந்துகொண்டிருக்கிறேன். மேலும், இணையத்திலும் நிறைய  விஷயங்களை  தேடித் தேடி கற்றுக்கொண்டேன். இந்நிலையில், வேலையை விட்டதால் பெரிய செலவுகள் இல்லாமல் நான்கு சுவருக்குள்  இருந்தபடியே என்ன செய்யலாம் என்று  யோசித்தேன். அப்போதுதான் புட் போட்டோகிராபி குறித்த எண்ணம் வந்தது.  எனவே, விதவிதமான  உணவுகளை போட்டோ எடுக்கத் தொடங்கினேன். பின்னர், நான் எடுத்த போட்டோக்களையெல்லாம் ஆன்லைனில் பதிவிட்டேன். அதைப் பார்த்துவிட்டு நிறைய ரெஸ்டாரண்ட்களில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களது புரொமோஷனுக்காக உணவுகளை எல்லாம் படம்பிடித்து தரச் சொன்னார்கள். இப்படித்தான் புட் போட்டோ கிராபியின் உள்ளே வந்தேன். எனது படங்களைப் பார்த்துவிட்டு, நிறைய ரெஸ்டாரண்ட்  ஆர்டர்கள்  வரத்தொடங்கியன.  ரெஸ்டாரண்ட் தவிர, உணவு சம்பந்தமான  தயாரிப்புகளில்  ஈடுபடுபவர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின. உதாரணமாக, மஞ்சள்தூள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் புரொமோஷனுக்காக அவர்களின் தயாரிப்புகளை படம் பிடித்து தரச்சொன்னார்கள். இப்படித்தான் புட் போட்டோகிராபிக்குள் வந்தேன். இந்நிலையில், எண்ணெய் நிறுவனம், மசாலா தயாரிப்புகள் நிறுவனம் போன்றவற்றின் விளம்பரப் படங்களுக்கும் போட்டோ ஷூட்  பண்ணித்  தரச்சொன்னார்கள்.  அதற்கு  “புட் ஸ்டைலிங்”  என்று  பெயர், அந்த  வாய்ப்புகளும் வரத் தொடங்கின.  புட் போட்டோகிராபியில் இறங்கிய பின்னர்,  அதற்காக நிறைய பயணம் செய்யத் தொடங்கி னேன். அப்போதுதான் எவ்வளவு விதமான  உணவுகள்  நாட்டில் இருக்கிறது என்று தெரிந்து மலைத்துப் போய்விட்டேன்.  அதைத்தொடர்ந்து மேலும்,   புதுப்புது உணவு வகைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். நிறைய உணவுகளின்  பெயர்களை  இப்போதுதான் முதன்முதலில் கேட்கிறேன்.  பார்க்கவே புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள் சுவையிலும்  அபாரமாக இருப்பதை  உணர்ந்தேன். உதாரணமாக  திருச்சியில் 100 ஆண்டுகள் பழமையான  ஸ்வீட்ஸ் ஸ்டால் ஒன்று  இருக்கிறது.  அங்கே  பத்து நாள்  தங்கி  அவர்களின்  தயாரிப்புகளை  படம்பிடித்து  கொடுத்தது  மிகவும்  புது அனுபவமாக  இருந்தது. அதுபோன்று வேலூரில் 100 ஹெரிட்டேஜ்  என்ற ரெஸ்டாரண்ட்  இருக்கிறது.  அவர்களுக்கு   நான்கு ஆண்டுகளாக நான்தான் போட்டோ ஷூட் செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து விதவிதமான உணவுகளை தயாரித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தவகையில்  சமீபத்தில் 1 அடிக்கு மீட்டர் கபாப்  ஒன்று  தயாரித்திருந்தார்கள்.  அதைப் பார்த்து  மிகவும்  பிரமித்துப் போனேன். அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு   பிரபல செஃப்பான கெளசிக்தான்  ஆலோசகராக  இருக்கிறார்.  அவருடைய ஆலோசனை பேரில்  புதுப்புது தயாரிப்புகளை  வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக, சிக்கன் பாவ், பாதாம் ரோஸ் லட்டு இன்னும் ஏராளமானவை. மற்றபடி புட் புரொடக்ட்ஸ் என்று எடுத்துக் கொள்ளும்போது, தயாரிப்புகளை எனது ஸ்டூடியோவிற்கே  அனுப்பிவிடுவார்கள். ஐடி நிறுவனத்தைவிட்டு வெளியே வரும்போது, இந்த வருமானத்தை போட்டோகிராபி தந்துவிடுமா என்ற பயத்துடன்தான் வந்தேன்.  ஆனால், தற்போது அந்தளவு வருமானத்தை முழுமையாக அடையவில்லை என்றாலும் ஓரளவு எட்டிவிட்டேன்.  மேலும்,  மனதுக்கு பிடித்த ஒன்றைச் செய்கிறேன் என்பதே நிறைவாக இருக்கிறது. ஆனால், நிச்சயம் இன்னும் 2 ஆண்டுகளில் அந்த வருமானத்தை தாண்டிவிடுவேன் என்ற  நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால்,  தற்போது,  இன்டர்நேஷனல்   வாடிக்கையாளர்களும்  வரத் தொடங்கியிருக்கிறார்கள். போட்டோ ஷூட்டுக்காக ஒரு நிறுவனம்  என்னை அணுகினால், முதலில் அது என்ன தயாரிப்பு, அவர்களின் தனித்துவம் என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்டு அதனை  எவ்வளவு அழகாகக்  காட்டலாம்  என்பதற்காகப் பயிற்சிகள்  எடுத்துக்கொள்வேன். உதாரணமாக சமீபத்தில் ஒரு ஸ்பைஸஸ் நிறுவனம் அணுகினார்கள். அது முற்றிலும்  ஆர்கானிக்கான  மசாலா தயாரிப்பு நிறுவனம்.  எனவே, அவர்களுக்கு பழங்காலப் பாரம்பரிய  உணர்வை  போட்டோவில் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து  அந்தக்காலத்து உரலைக் கொண்டுவரச்சொல்லி அதில் பெண்களை இடிக்கவிட்டு படங்கள் எடுத்தேன்.  அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோன்று, ஆவாரம்பூவை வைத்து  தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்கின் புரொடக்ட்டுக்காக எடுத்துக் கொடுத்த போட்டோவிற்கும் நல்ல வரவேற்பு  கிடைத்தது. அதுபோன்று  பிலிப்ஸ்  நிறுவனத்தின் மிக்ஸர்  கிரைண்டர் விளம்பரத்துக்காக  ஒரு போட்டோ ஷூட் எடுத்ததும் சிறந்த அனுபவம்.இன்று நாமிருக்கும் டிஜிட்டல் உலகில்   ஆன் லைனில் ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால் அதன்  புகைப்படத்தை பார்த்துவிட்டுத்தான் வாங்குகிறோம். அந்தவகையில்  எனது புகைப்படங்கள்  வாடிக்கையாளர்களை  கவர்ந்து  கொண்டு வந்து  சேர்க்கிறது என்பது எதையோ  சாதிக்கின்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர தற்போது, ஃபுட் போட்டோகிராபி குறித்து கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன்” என்றார். தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்ஆன்லைனில்தான் சமையல் பொருள் வாங்குகிறோம், அந்த வகையில்   புகைப்படத்தை பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்கின்றோம்.  எனது புகைப்படங்கள் வாடிக்கை யாளர்களை கவர்ந்துள்ளன….

You may also like

Leave a Comment

9 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi