Saturday, June 29, 2024
Home » பீஷ்ம அஷ்டமி என்றால் என்ன?

பீஷ்ம அஷ்டமி என்றால் என்ன?

by kannappan

பீஷ்ம அஷ்டமி 19-02-2021சந்தனு மகாராஜாவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்த மகன் தேவவிரதன். கங்கா தேவி தன்னை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், சத்தியவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்  சந்தனு. ஆனால் சத்தியவதியின் தந்தை மன்னருக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டார். “ஏற்கனவே உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறானே! அவனுக்குத் தானே அடுத்தபடியாகப் பட்டாபிஷேகம்  செய்வீர்கள்? என் மகளும் அவளது வாரிசுகளும் அரசராக முடியாதே! ஆதலால் உங்களுக்கு என் மகளை மணம் முடித்துத் தர மாட்டேன்!” என மறுத்தார், சத்தியவதியின் தந்தை.இதைக் கேள்வியுற்ற தேவவிரதன், சத்தியவதியின் தந்தையைச் சந்தித்து, “எனக்கு ராஜ்ஜியத்தில் ஆசையில்லை. உங்கள் மகளுக்கும் என் தந்தைக்கும் பிறக்கும் மகனே தாராளமாக முடிசூடிக்  கொள்ளட்டும்! என் தந்தைக்கு உங்கள் மகளை மணம் முடித்து வையுங்கள்!” என்று கோரினான். ஆனால், சத்தியவதியின் தந்தையோ, “தேவவிரதா! உனக்கு இருக்கும் இந்தப் பரந்த மனம் உன்  பிள்ளைகளுக்கே வராது! நாளை உனது பிள்ளைகள் யாராவது வந்து என் பேரனைக் கொன்று ராஜ்ஜியத்தை அபகரித்தால் என்ன செய்வேன்?” என்று கேட்டார்.அப்போது தேவவிரதன், “இன்று முதல் நான் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வேன்! எனக்குச் சந்ததியே வேண்டாம்!” என்று சபதம் செய்தார். கடுமையான விரதத்தை மேற்கொண்டு நிறைவேற்றுபவரை  ‘பீஷ்ம’ என்று குறிப்பிடுவார்கள். இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என்ற கடினமான விரதம் மேற்கொண்டபடியால், தேவவிரதன் ‘பீஷ்மர்’ என்ற பெயரைப் பெற்றார். பீஷ்மரின்  சபதத்தால் மனம் மாறிய சத்தியவதியின் தந்தை, தன் மகளைச் சந்தனு மகாராஜாவுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.தனது மகன் தனக்காகச் செய்த தியாகத்தை எண்ணிப் பெருமை கொண்ட பீஷ்மரின் தந்தை சந்தனு, பீஷ்மருக்கு ஒரு வரம் அளித்தார். “நீ எப்போது உன் உயிர் பிரிய வேண்டும் என்று நினைக்கிறாயோ,  அப்போது தான் உன் உடலை விட்டு உயிர் பிரியும்!” என்பதே தந்தை பீஷ்மருக்குத் தந்த வரமாகும்.அதன் அடிப்படையில், மகாபாரத யுத்தத்தின் பத்தாம் நாளில் அர்ஜுனனின் பாணங்களால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் விழுந்த பீஷ்மர், உத்தராயண காலம் வந்தபின் தனது உயிர் பிரிய வேண்டும்  என்று கருதினார். பொதுவாக, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலுள்ள காலமான உத்தராயண காலத்தில் மரணம் அடைபவர்கள் நற்கதி அடைவார்கள் என்று ஒரு கருத்து உண்டு. (ஆனால்  இறைவனிடம் முழுமையாக சரணாகதி செய்த அடியார்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் எக்காலத்தில் மரணம் அடைந்தாலும் முக்தி நிச்சயம்) உலகோரின் அக்கருத்தை அடியொற்றி உத்தராயணக்  காலத்துக்காக அம்புப் படுக்கையிலேயே காத்திருந்தார் பீஷ்மர்.மகாபாரத யுத்தம் நிறைவடைந்த பின் தர்மபுத்திரருக்கும் மற்றவர்களுக்கும் அறநெறிகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும்உபதேசித்தார் பீஷ்மர்.சுமார் ஐம்பத்தெட்டு நாட்கள் அம்புப் படுக்கையில்  கிடந்த பின், மாக மாத (தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலம் மாக மாதம்) வளர்பிறை அஷ்டமி நாளில் பீஷ்மர் தனது பூத உடலை நீத்துச் சுவர்க்கத்தை அடைந்தார். அந்த  மாக மாத வளர்பிறை அஷ்டமி தான் பீஷ்ம அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடி விரதம் இருந்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நாளில் புண்ணிய நதிகளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம்  செய்வதும் விசேஷமாகும். கங்கையின் மகனான பீஷ்மர் பூத உடலை நீத்து நற்கதி அடைந்த இந்நாளில் கங்கையில் நீராடுவது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும்….

You may also like

Leave a Comment

10 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi