பிஸ்கட் பிறந்த கதை

பிஸ்கட்டைப் பிடிக்காத மனிதர் உண்டோ? பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை முதல் வயதானவர்கள் வரை பிஸ்கட் என்றால் தனிப் பிரியம்தான். சிலருக்கு சிலவகை பிஸ்கட்கள் பிடிக்காதே தவிர பிஸ்கட்டே பிடிக்காது என்பவர்கள் மிகவும் குறைவு. சாக்லெட்டை சாப்பிடாதீங்க எனும் மருத்துவர்கள்கூட பிஸ்கட்டை அளவாகச் சாப்பிடுங்க என்றே அறிவுறுத்துகிறார்கள்.இப்படி சகல தரப்பினரின் அபிமானத்தையும் பெற்ற பிஸ்கட் உலகுக்கு வந்தது எப்படி?பிஸ்கட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம். ரொட்டியின் வேறொரு வடிவமாகவே பிஸ்கட்டை உருவாக்கினார்கள் ஐரோப்பியர்கள். அந்தக் காலத்தில் அவர்கள் கப்பல் பயணம் செய்தபோது டன் கணக்கில் பிஸ்கட்களைச் சுமந்து திரிந்திருக்கிறார்கள். பிஸ்கட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பதுதான் இதற்குக் காரணம். அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கட்டை ‘இன்ஸ்டண்ட் பிரெட்’ அதாவது திடீர் ரொட்டி என்று அழைத்தனர். ரொட்டியை பேக்கிங் சோடா கலந்து தயாரித்தால் அது பிஸ்கட் என்பதான எளிய ரெசிப்பி முறைதான் அப்போது இருந்தது. முதல் உலகப் போரின் போது வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நாட்கள் பிஸ்கட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுவையும் முக்கியம் என்ற யோசனையிலும் புதிய வகை பிஸ்கட்டை உருவாக்கினார்கள். அதுதான், அன்ஸாக் (Anzac) வகை பிஸ்கட்டுகள். 1877ல் ஜான் பாமன் என்பவர்தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் பிஸ்கட் தயாரித்தார். இவர் தயாரித்த பிஸ்கட்டுகள் டீ கப்பின் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தன. பிஸ்கட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்தான் என்றாலும், அதை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிஸ்கட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரைப் பொருள் ஒட்டிக்கொள்ளும். நிறைய பேர் பிஸ்கட்டுடன் டீயும் அருந்துவதால், டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்து கொள்ளும். அதனால்தான் அதிகம் பிஸ்கட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறைபடிந்து காணப்படுகின்றன. இன்று, சர்க்கரை நோயாளிகளுக்கான சுகர்ஃப்ரீ பிஸ்கட்கள் முதல் விதவிதமான பிஸ்கட்கள் சந்தைக்கு வந்துவிட்டன. அளவோடு சுவைத்தால் பிஸ்கட் போல் நம் வாழ்க்கையும் சுவைக்கும்….

Related posts

வண்ண வண்ண கேண்டி… வகை வகையான கேண்டி!

மகத்துவம் மிகுந்த பாரம்பரிய உணவுகள்!

6 வகையான அசைவ தொக்கு… 3 வகையான அசைவ குழம்பு…