பிள்ளை வரமருளும் பேரழகுப் பெருமாள்!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்து தனது பேரருளை அனைத்து மக்களுக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் திருவேங்கடவன். பல்வேறு கால கட்டங்களில், இந்தியத் திருநாட்டில் மட்டுமின்றி மேலை நாடுகளிலும்  திருவேங்கடவனுக்கு ஆலயங்கள் எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். அதிக அளவு எண்ணிக்கையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயங்கள் அமைந்துள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் துவாரகா திருமலா, சில்க்கூரு, தேவுனி கடப்பா போன்ற தலங்களில் உள்ள ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. இந்த வரிசையில் தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் எழுந்தருளியிருக்கும் வெங்கடேசப் பெருமாள், மக்களுக்கு அருள் புரியும் அற்புத தெய்வமாக வழிபடப்படுகிறார். சாதவாகன மன்னர்கள் மற்றும் மேலைச் சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த மாவட்டத் தலைநகரான கரீம் நகர், வரலாற்றுக் காலத்தில் எலகண்ட்லா என்ற பெயர் பெற்றிருந்தது. நிஜாம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிருந்த கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திக் கொண்டிருந்த சையத் கரிமுல்லா ஷா ஸாஹேப் கிலாதார் என்பவரின் நினைவாக இப்பகுதி கரீம் நகர் என்ற பெயரைப் பெற்றது. 200 ஆண்டுகளுக்கு முன்பாக மரங்கள் அடர்ந்து புதர் மண்டிக்கிடந்த இப்பகுதியில் ஒருநாள் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் ஒரு பாறையில் சுயம்புவாக எழுந்தருளிக் காட்சிதர, இதைக் கண்டு பரவசமடைந்த பொதுமக்கள் முட்புதர்களை அகற்றி திருவேங்கடவனை வழிபடத் தொடங்கினர். பக்கத்து கிராமங்களிலிருந்து மேளதாள, மங்கள வாத்தியங்களோடு பூஜைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அர்ச்சகர்களும், பொது மக்களும் பகவானுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். நாளாவட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கவே ஆலயம் புனரமைக்கப்பட்டது. நிஜாம் மன்னர்கள் காலத்தில் இப்பகுதியை நிர்வகித்த முகமதிய தாசில்தார் ஒருவர் குழந்தை பாக்கியம் வேண்டி, தன் மனைவியோடு இத்தலத்திற்கு வந்து வெங்கடேசப் பெருமாளை மனதார வழிபட்டதாகவும், பெருமாளின் பேரருளினால் அவருக்கு பாக்கியம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீ சந்தான வெங்கடேஸ்வர ஸ்வாமி என்று அழைக்கப்படலானார். ஆலய நுழைவாயிலின் மீது திருவேங்கடவனின் சுதைச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பிரதான வாயிலை அடுத்து மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்று அமைந்துள்ளது. மூன்று நிலை விமானம் கொண்ட கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்களான ஜய விஜயர்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். கருவறையில் சுயம்புமூர்த்தியாகத் திகழ்கின்ற சந்தான வெங்கடேசப் பெருமாள், ஒரு பெரிய திருநாமம் வடிக்கப்பட்டுள்ள பாறையில் அருள்பாலிக்கிறார். திருநாமத்தின் இருபுறங்களில் சங்கு, சக்கரம் மற்றும் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெருமாள் பெரிய மீசையோடு இங்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.மூலமூர்த்திக்குப் பின்புறமுள்ள சிறிய மேடையில் உற்சவர், ஸ்ரீ தேவி, பூதேவியோடு, பேரழகுடன் அருள்பாலிக்கிறார். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள் நடைபெறுகிறது. ஆலய வளாகத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணர், அனுமன், ஆழ்வார்களோடு விநாயகருக்கும், நவகிரக நாயகர்களுக்கும் தனிப்பட்ட சந்நதிகள் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று ஆயிரக் கணக்கான மக்கள் ஸ்ரீ சந்தான வெங்கடேஸ்வரப் பெருமாளைத் தரிசிக்க வருகிறார்கள். மார்கழி மாதத்தில் திருப்பாவைப் பாசுரங்களை பக்தர்கள் பாராயணம் செய்கிறார்கள். வைசாக பௌர்ணமி நாளன்று நடைபெறும் ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம் இந்த ஆலயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வு. …

Related posts

ஆடி அமாவாசை: காகத்திற்கு இப்படி உணவு வைத்து பாருங்க… வாழ்க்கை உயரும்!!

ஆடி தகவல்கள்

சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!