Friday, September 20, 2024
Home » பிள்ளையாரிடம் என்ன வரம் கேட்க வேண்டும்?: மகாகவி பாரதி சொல்லித் தருகிறார்

பிள்ளையாரிடம் என்ன வரம் கேட்க வேண்டும்?: மகாகவி பாரதி சொல்லித் தருகிறார்

by kannappan
Published: Last Updated on

மகாகவி சுப்பிரமணிய பாரதி, பிள்ளையாரைப் பற்றி அபாரமாகப் பாடுகிறார். கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம். எதற்காக காலை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தையும் சொல்லுகின்றார்.குணமுயர்ந்திடவே விடுதலைகூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம். விநாயகருக்கு ஐங்கரன் என்கிற பெயர் உண்டு. ஐந்து கரம் கொண்ட கடவுள், யானை முகக் கடவுள். அள்ளிக் கொடுப்பதற்கு நான்குகரங்கள் போதாது என்பதால் ஐந்தாவது கரமாகிய ஞானக்கரம் அவருக்குண்டு. எந்தக் காரியமாக இருந்தாலும், அந்தக் காரியங்கள் முழுமையாக நிறைவேறவும், முழுப்பலன் தரவும் அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் தீரவும் விநாயகரை வணங்க வேண்டும். எளிமையின் எல்லை நிலம் பிள்ளையார். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்கிற பழமொழி உண்டு. எதில் வேண்டுமானாலும் அவரை ஆவாகனம் செய்யலாம். மஞ்சளில் ஆவாஹனம் செய்யலாம். மண்ணைப் பிசைந்து ஆவாஹனம் செய்யலாம். மலர்களில் ஆவாஹனம் செய்யலாம். சந்தனத்தில் ஆவாஹனம் செய்யலாம். ஏன், பசுஞ்சாணியிலும் ஆவாஹனம் செய்யலாம். எந்த அபூர்ணத்தையும் பூரணமாக்கும் வல்லமை விநாயகருக்கு உண்டு. ஞானக் கொழுந்து என்று அவரை சாத்திரங்கள் பேசுகின்றன. எல்லாக் கடவுள்களின் ஆலயங்களும் எல்லா ஊரிலும் இருக்காது. ஆனால், எல்லா ஊர்களிலும் தவறாது இருக்கக்கூடிய ஒரே ஆலயம் விநாயகர் ஆலயம். காரணம் விநாயகர் வழிபாடு எளிமையானது. வெல்லத்தில் பிள்ளையாரை வைத்து, அவருக்கு நிவேதனமாக அதே வெல்லத்தை கிள்ளி வைக்கக்கூடிய வழிபாட்டு முறை வேறு எதிலும் கிடையாது. ஆற்றங்கரையோரம், தோட்டம், வீட்டு வாசல் என எந்த இடத்திலும் நீக்கமற பிள்ளையார் வந்துவிடுவார். கண் திருஷ்டியை நீக்குபவர் கணபதி. அதனால்தான் வாஸ்து சாஸ்திரத்தில் கணபதிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. தெருக்குத்து, அல்லது வாஸ்து குறைபாடு போன்ற விஷயங்களுக்கு பரிகாரமாக ஒரு சிறு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்கின்றனர். பிள்ளையாருக்கான எத்தனையோ தோத்திர நூல்கள் உண்டு. அதில் அவ்வையாரின் `விநாயகர் அகவல்’ பாராயணத்திற்கு உரியது. உடனடி பலன் அளிப்பது. இன்னொரு அற்புதமான நூலான விநாயகர் நான்மணிமாலை.சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது. புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட இந்நூல், நான்மணி மாலை எனப்படும் பிரபந்த வகையைச் சார்ந்தது. இந்நூல் பாரதியார் இறந்த பின்னர் 1929-ஆம் ஆண்டில் முதல் பதிப்பைக் கண்டது. 1919ஆம் ஆண்டில், பாரதியார் இருக்கும்போதே “விநாயகர் தோத்திரம்” என்னும் நூலொன்றை அச்சிடும் முயற்சியைப்பற்றிப் பாரதியார், சி.விஸ்வநாத ஐயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல் என்னும் நான்கு பாடல் வகைகளின் கோர்வையாக அமைந்து அந்தாதிச் செய்யுள் அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. இதில் 40 பாடல்கள் உள்ளன. பாரதியாரின் மிகப் பிரபலமான பல வரிகள் இந்த விநாயகர் நான்மணி மாலையில் உண்டு. அவர் பிள்ளையாரிடம் வரம் கேட்கும் பிரார்த்தனையின் கம்பீரம் நமக்கு வியப்பைத் தரும். 1) பிள்ளையாரே, நான் கேட்கும் வரங்களை நீ காது கொடுத்து கேட்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு பேசுகிறார்.2) எனக்குச் சலனமில்லாத மனது வேண்டும். 3) என்னுடைய அறிவில் அஞ்ஞான இருள் தோன்றக் கூடாது. 4) நான் நினைக்கும் போது உன்னுடைய மௌன மனநிலையை எனக்குத் தர வேண்டும்.5) ஏராளமான செல்வமும் அவை அனுபவிக்க நல்ல ஆயுளும் தர வேண்டும்.“எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூ பதியே” என்று அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் பாடியது போல, இங்கே தன்னை இழந்த நலத்தை பாரதியார் மகாகணபதியிடம் கேட்கிறார்.எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி,மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல்,நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்.கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே.

இன்னொரு அற்புதமான பாடல் நம் உள்ளத்தை உருக்கும். பிள்ளையாரிடம் பிரத்தியேகமாக அவர் கேட்கும் வரங்களின் பட்டியல் இது.
உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்

மனக்கேதம் யாவினையும் மாற்றி – எனக்கேநீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகுவேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.இதையெல்லாம் தாண்டி, மகாகவி பாரதியார் எப்பொழுதும் உலக நன்மையையே கருதியவர். எந்த தெய்வத்தை நோக்கிய பிரார்த்தனையாக இருந்தாலும், அது உலக நன்மையை ஒட்டியதாக இருக்கும். இது பாரதியாரின் இயல்பு. விநாயகப் பெருமானே அதற்காகத்தானே இருக்கிறார். அதனால், தைரியமாக விநாயகரிடம் கேட்கிறார்.பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தேஇன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவேசெய்தல் வேண்டும், தேவ தேவா!ஞானாகா சத்து நடுவே நின்று நான்பூமண்டலத்தில் அன்பும் பொறையும்விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீதிருச்செவி கொண்டு திருவுள மிரங்கிஅங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை அருள்வாய்;என்னும் வரிகள் மூலம் உலகில் உள்ள உயிரினங்கள்யாவும் இன்புற்று வாழச் செய்வதற்கான சக்தியைத் தனக்கு அருளுமாறும் இறைவனை வேண்டுகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று, நாம் நமக்காக பிள்ளையாரிடம் வரம் கேட்பது போலவே, உலக மக்களுக்காகவும் கேட்கவேண்டும். காரணம், அந்த உலகத்தில் தானே நாமும் இருக்கிறோம்.தொகுப்பு: பாரதிநாதன்

You may also like

Leave a Comment

16 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi