பிளஸ் 2 தேர்வில் ஆட்டோ டிரைவர் மகள் முதலிடம்

பெரம்பூர்: பிளஸ் 2 தேர்வில் ஆட்டோ டிரைவர் மகள் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பூங்கோதை என்ற மாணவி, முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 578 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார். இதுகுறித்து பூங்கோதை கூறுகையில், ‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். வீட்டில் எந்தவித தடையும் இல்லாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொண்ட காரணத்தினால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. பி.காம் படித்து முடித்துவிட்டு அடுத்ததாக எம்.எஸ்.டபிள்யூ படிக்க விரும்புகிறேன்,’’ என்றார். முதல் மதிப்பெண் பெற்ற பூங்கோதையின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

தாய் சிவகாமி வீட்டு வேலை செய்து வருகிறார். வறுமையிலும் எனது பெற்றோர் என்னை நல்ல முறையில் படிக்க வைத்ததாக மிகவும் உணர்ச்சி பூர்வமாக பூங்கோதை தெரிவித்தார். இதே பள்ளியில் பயின்ற ஹரிணி பிரியா மற்றும் திவ்ய ஆகிய 2 மாணவிகளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 3வது இடம் பிடித்துள்ளனர். இவர்கள் 573 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் ஹரிணி பிரியா வியாசர்பாடியைச் சேர்ந்தவர். கணவரை பிரிந்த நிலையில், பானு ஹரிணி பிரியாவை படிக்க வைத்து வந்துள்ளார். இதேபோன்று திவ்ய என்ற மாணவி கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை வினோத்குமார் காவலாளியாக வேலை செய்து வருகிறார். மூன்றாம் இடம் பிடித்த ஹரிணி பிரியா மற்றும் திவ்ய ஆகிய 2 மாணவிகளும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் படிப்பில் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்