பிரேக் பிடிப்பதில்லை: ‘டப்பா’ பஸ்களால் ஊழியர்கள் புலம்பல்

திருமங்கலம்: ‘டப்பா’ பஸ்களால் திருமங்கலம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் உள்ள திருமங்கலம் பணிமனையில் 101 பஸ்கள் உள்ளன. இவற்றில் 95 பஸ்கள் தினசரி டிரிப் பஸ்களாகவும், இரண்டு பஸ்கள் வெளியூர் பஸ்களும் உள்ளன. இது போக மீதமுள்ளவை ஸ்பேர் பஸ்களாகும். இவற்றில் சமீபத்தில் இந்த டிப்போவிற்கு வழங்கப்பட்ட ஏசி பஸ்கள் மற்றும் சிவப்பு வண்ண பஸ்களை தவிர்த்து மீதமுள்ள டவுன் பஸ்களில் குறிப்பாக தாழ்தள பஸ்கள் இயக்குவதற்கு லாயகற்ற முறையில் உள்ளன. திருமங்கலம் நகரிலிருந்து மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தாழ்தள பஸ்களில் பல பஸ்களில் சரிவர பிரேக் பிடிப்பதில்லை என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆரப்பாளயைத்திலிருந்து திருமங்கலத்திற்கு வந்த டவுன் பஸ் அழகப்பன்நகர் அருகே நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேடபட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ் காளப்பன்பட்டியில் பிரேக் பிடிக்காமல் கிராமத்தில் ஊரணி அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கூறுகையில், ‘இந்த டிப்போவில் இருந்து இயக்கப்படும் பாதிக்கும் மேற்பட்ட டவுன்பஸ்கள் பிரேக் பிடிக்காமலேயே இயக்கப்படுகின்றன. உண்மையை கூறவேண்டுமெனில் வழிதடங்களில் ஓடும் தகுதியை இழந்த பஸ்கள்தான் இயக்கப்படுகின்றன. மதுரை செல்வதற்குள் திருப்பரங்குன்றம் பாலம், ஆண்டாள்புரத்தில் அடுத்தடுத்து உள்ள இரண்டு பாலங்களை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஒவ்வொரு டிரிப்பிலும் டிரைவர்கள் தங்களது உயிரை கைகளில் பிடித்த படியேதான் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் கூறியும் பலனின்லை. அதிகாரிகள் ஊழியர்களை நிர்பந்தம் செய்து பஸ்களை இயக்கும்படி அறிவுறுத்துகின்றனர். வேறு வழியின்றி டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்கி வருகின்றனர். மதுரை கோட்டத்திலேயே அதிக லாபத்தில் கூடுதலான வசூலை அள்ளி தருவது திருமங்கலம் டிப்போவில் தான். ஆனால் இந்த டிப்போவில் இயக்கப்படும் பஸ்களின் நிலைமை படுமோசமாகவே உள்ளது. இதனை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனின்லை’ என்றனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்