பிரமிளா வகை மலர் செடிகளை பராமரிக்கும் பணி தீவிரம்

 

ஊட்டி, ஜன.5: பிரமிளா வகை மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்து காணப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, கோடை காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்கா தயார் செய்யப்படும். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க நுழைவு வாயில் பகுதியில் உள்ள நட்சத்திர வடிவிலான பாத்திகளில் பிரமிளா வகை பல செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் ஊதா நிற மலர்கள் பூத்துள்ளன. ஓரிரு நாட்களில் இந்த மலர் செடிகளும் அகற்றப்பட்டு அப்பகுதியில் மேரிகோல்டு மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன. எனினும், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த பிரமிளா வகை மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் தொடர்ந்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு