பிரதமர் மோடி அறிமுகம் காது கேட்காதவர்களுக்கு சைகை மொழி அகராதி: பார்வையற்றோருக்கு பேசும் ஆடியோ புத்தகம்

புதுடெல்லி: இந்திய சைகை மொழி அகராதி மற்றும் பார்வையற்றோருக்கான பேசும் ஆடியோ புத்தகத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.  உலகளாவிய கற்றல் வடிவமைப்புக்கு இணங்க இந்திய சைகை மொழி அகராதி (காதுகேளாதோருக்கான ஆடியோ மற்றும் எழுத்துக்கள் அடங்கிய சைகை மொழி வீடியோ), பேசும் புத்தகங்கள் (பார்வையற்றோருக்கான ஆடியோ புத்தகங்கள்) மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் உள்ளிட்ட கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ‘ஷிக்‌ஷாக் பர்வ்’ என பெயரிடப்பட்ட இத்திட்டத் தொடக்க விழா, காணொலி வாயிலாக நடந்தது. இதில் பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் உரையாடி பேசியதாவது: கொரோனா காலத்தில், கல்வித்துறையின் திறனை கண்கூடாக பார்த்தோம். பல சவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் நாம் முறியடித்தோம். ஆன்லைன் வகுப்புகள், குரூப் வீடியோ கால்கள், ஆன்லைன் தேர்வுகள் என இதுவரை கேள்விப்படாத பல விஷயங்களை செய்து காட்டினோம். இதே போல இன்றும் பல்வேறு புதிய முன்முயற்சிகளை தொடங்கி உள்ளோம். நமது கல்வித்துறையை உலகத் தரத்திற்கு மேம்படுத்த, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் தொடர்ந்து பல சீர்த்திருத்தத்தையும், வடிவமைப்பையும் செய்து வருகிறோம். வேகமாக மாறி வரும் இந்த யுகத்தில், ஆசிரியர்களும் புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றறிய வேண்டும். இத்தகைய மாற்றங்களுக்காக தனது ஆசிரியர்களுக்காக இந்த நாடும் தயாராகிறது. நாட்டின் எதிர்காலத்தை செதுக்குவதில் கல்வித்துறை முக்கிய பங்கு வகுக்கும். அதில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்கள் உலகளாவிய போட்டிக்கு நமது கல்வி அமைப்பை தயார்படுத்துவது மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.  இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்சில் இந்திய வீரர்களின் சிறப்பான பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார்.* பாடத்திட்டத்தில் முதல் முறை சேர்ப்புபிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘எந்த ஒரு நாடும் முன்னேற கல்வி சமத்துவமாக, அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆடியோ புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் இன்று கல்வியின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளன. இந்திய சைகை மொழி முதல் முறையாக பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்திய சைகை மொழி அகராதியில் 10 ஆயிரம் வார்த்தைகளுக்கு சைகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

செனாப் பள்ளத்தாக்கில் அமித் ஷா பிரசாரம்; ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது ஏன்?: ஒன்றிய அமைச்சர் புது விளக்கம்