பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக விமர்சனம் பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கடும் கண்டனம்

வாஷிங்டன்: பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்புக்கடைக்காரர் பிரதமராக இருக்கிறார்’ என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்  கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ‘ காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார். அவருக்கு  பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த அவையில் பேச வேண்டாம்’ என்று எச்சரித்தார். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல்  கூறுகையில், ‘ ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார்’ என்றார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து மிகவும் தரம் தாழ்ந்த ஒன்று.  1971ல் வங்காளிகள், இந்துக்கள் மீது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நடத்திய இனப்படுகொலையை அவர் வசதியாக மறந்து விட்டார். சிறுபான்மை மக்களை நடத்துவதில் இன்னும் பாகிஸ்தான் மாறவில்லை. அதை மறந்துவிட்டு இந்தியாவை குறைசொல்ல வேண்டாம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பயன்படுத்த முடியாததால் தான் அவர் இந்த அளவுக்கு நாகரீகம் இல்லாத அளவுக்கு சீறியிருக்கிறார்.  எந்த நாடும் 126 பயங்கரவாதிகளையும், 27 ஐநாவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளையும் கொண்டிருப்பதாக பெருமை கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை தங்கள் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்கிய நாடு அதை நோக்கியே செல்லும். இவ்வாறு தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் மீனாட்சி லெகி, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளனர்….

Related posts

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறும் அமெரிக்க அதிபர் பைடன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என குறிப்பிட்டதால் பரபரப்பு

நேபாளத்தில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு..!!