பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அலட்சியம் பஞ்சாப் போலீஸ் அதிகாரி திடீர் பணியிட மாற்றம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சண்டிகர்: பிரதமர் மோடி கடந்த வாரம் பஞ்சாப் வந்த போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு  தொடர்பாக பெரோஸ்பூர் மாவட்ட ஐபிஎஸ் அதிகாரி, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் கடந்த 5ம் தேதி நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வந்தார். சாலை மார்க்கமாக பிரதமரின் வாகனங்கள் வந்தன. அப்போது, விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடியின் கார் மேற்கொண்டு செல்ல முடியாமல், பாலம் ஒன்றின் மீது 20 நிமிடங்கள் நின்றது. காரிலேயே அவர் காத்திருந்தார். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முடியாத நிலையில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் திரும்பி சென்றார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடி, தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம், 3 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. அதேபோல், பஞ்சாப் அரசும் 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. மோடியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் உள்துறை அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும்படி பாஜ கோரி வருகிறது. இந்நிலையில், பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு எஸ்பி ஹர்மந்த்தீப் சிங் ஹன்ஸ், நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நரேந்திரன் பார்கவ் புதிய சிறப்பு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், ஒன்றிய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசின் விசாரணை குழுக்கள் 2 நாட்கள் விசாரணையை நிறுத்த உத்தரவிட்டது. மேலும், பஞ்சாப் அரசிடம் உள்ள மோடியின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றும்படி, பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிட்டது. * செய்தது யார்?பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி மாநில அரசால் உயரதிகாரிகளை மாற்ற இயலாது. இதனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பெரோஸ்பூர் சிறப்பு எஸ்பி.யின் பணியிட மாற்றம் நடந்ததா? அல்லது மாநில அரசே அதை செய்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது….

Related posts

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை

மோடியை நேருவுடன் ஒப்பிட முடியாது: பாஜ எம்.பி. பேச்சால் சர்ச்சை