பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்!

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற இத்தகைய வார்த்தையைத் தோல்வியைத் தழுவியவர்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். வெற்றி பெற்றவர்கள் எவரும் இப்படி ஒரு அவநம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பயன்படுத்தமாட்டார்கள். சில காலங்களுக்கு முன்னால் ஒருவர் செல்வச் செழிப்போடும், பேரும் புகழும் பெற்று வாழ்ந்திருந்தார். ஆனால் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அடுத்த வேளை சோற்றுக்கே பிறர் கையை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றார்.இன்னொருவர் வாழ்வின் கடைசி நிலையில் இருந்த சில காலத்திற்குள் தன் உழைப்பாலும், முயற்சியாலும், உத்வேகத்தாலும் மிகப்பெரிய செல்வந்தராக மாறியிருந்தார்.இந்த இருவருக்குள் விதி என்பது எங்கே விளையாடியது? இரண்டு பேரின் நிலைக்கும் பதில் ஒன்று தான். விதி என்பது அவரவர் வாழும் வாழ்க்கையைப் பொறுத்துதான் அமைகின்றது. அவரவர் வாழ்க்கை தான் அவரவர்களின் விதி.இருவரின் வாழ்க்கையும் சற்றுக் கூர்ந்து பார்த்தால் இந்த விதி என்பதன் அர்த்தம் வெகு இலகுவாகப் புரிந்து விடும். செல்வந்தராக இருந்தவர் நமக்கு ஏராளமான செல்வம் உள்ளது. பல தலைமுறைக்கும் செல்வம் இருக்கிறது. அதனால் நாம் ஏன் உழைக்க வேண்டும். இனி உழைத்து நாம் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். படிப்படியாகக் செல்வம் குறைந்தது. அடுத்தவேளை சோற்றுக்கே அல்லாடும் நிலைக்கு வந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் விதியாகி விடுகின்றது. அதேபோல வறுமையில் வாடியவர் தனக்கென்று ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு, அந்த இலட்சிய தூரத்தை எட்டிப் பிடித்து விட வேண்டும் என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார். இரவு பகல் என்று எந்த நிலையிலும் உழைப்பிலேயே தன் கவனத்தை செலுத்திக்கொண்டேயிருந்தார். அவருடைய செல்வமும் பெருகிக்கொண்டே இருந்தது. இதுதான் விதி! இவரது உழைப்பும், இலட்சியக் குறிக்கோளோடு வாழ்ந்த வாழ்க்கையும் தான் இவரது விதி! இவரைப்போலவே உழைப்பாலும், லட்சியக்குறிக்கோளோடும் வாழ்ந்து சாதித்த பெண்மணி ஒருவரையும் உதாரணமாக சொல்லலாம்..ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷா. அவரது தாய் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி கொண்டு இருந்தார். பெற்றோர்களால் இளம் வயதிலேயே ஆஷாவிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு தான் இருந்தது. இரண்டு குழந்தைகளும் பிறந்தது. இந்தநிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு,அவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ள தயாரானார். ஆஷாவின் தந்தை அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இந்த நிலையில் பெற்றோரின் அரவணைப்பில் ஆஷா வாழ்ந்து வந்தார்..கணவன் கைவிட்ட நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார்.அப்போது அவரின் தந்தை மகளின் மன வருத்தத்தை போக்க மீண்டும் படிப்பை தொடருமாறு ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். தந்தையின் ஊக்கத்தினால் பட்டப் படிப்பை தொடர முடிவு செய்தார். படிக்கும்போதே ஒரு தெளிவான இலக்கை தீர்மானித்தார், அது என்ன தெரியுமா? போட்டித்தேர்வு எழுதி அரசுப்பணியில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பது தான், இதை கேட்ட அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் ஏளனம் செய்தார்கள். 40 வயதை அடைந்து விட்டாய், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளாய் எப்படி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும். இது சாத்தியமே இல்லை என்றார்கள். ஆனால் ஆஷா அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கல்லூரி படிப்பை முடித்த பின்பு போட்டித்தேர்வு எழுத தயாரானார். அதற்கான பயிற்சியை முயற்சியுடன் மேற்கொண்டார்.அதன் பிறகு 2018ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில அரசுப்பணி தேர்வில் கலந்துகொண்டார். இரண்டு கட்டங்களாக அந்த தேர்வை எழுதினார். இந்தநிலை தான் எதிர்பாராதவிதமாக வந்த கொரோனா பேரிடர் காரணமாக தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமானது. அதேநேரம், பேரிடர் அவர்களது குடும்பத்தின் வருவாய் நிலையையும் கேள்விக்குறியாக்கியது. இதையடுத்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து குடும்பத்தின் வறுமையை போக்க உழைக்க தயாரானார் ஆஷா. தாயுடன் சேர்ந்து தூய்மைப் பணியாளராக ஈடுபட தயாரானார். ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக தனது தாயுடன் இணைந்து தெருக்களில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை செய்தார். சிரமமான பணியாக இருந்தபோதும் கடினமாக உழைத்தார்.இது என் தாய் செய்யும் பணி, எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது,எந்த பணியாக இருந்தாலும் அதை திறம்பட செய்ய வேண்டும் என்பது தான் என் தாய் எனக்கு கற்று தந்த பாடம் என்கிறார் ஆஷா.இந்தநிலையில் அவருடைய தேர்வு முடிவுகள் வெளியானது. மாநில அரசுப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ஆஷா. தற்போது  துணை கலெக்டராக அந்தஸ்து மிக்க பதவியில் பணியாற்றி வருகிறார். முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராக திட்டமிட்டு இருந்தார்.ஆனால் அவரின் வயது வரம்பு அதிகமாக இருக்க, அந்த முடிவை மாற்றி கொண்டு மாநில அரசுத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று சாதித்து உள்ளார்.கணவனை பிரிந்த போதும், தூய்மை பணியாளராக இருந்தபோதும் நிறைய கேலிகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டவர் ஆஷா. ஆனால் தனக்கு நேர்ந்த விமர்சனங்களையும், கேலிகளையும் உந்துதலாக மாற்றி கொண்டும் பிரச்னைகளை எதிர் கொண்டும் குறிக்கோளை நோக்கி கடின உழைப்புடன் கூடிய முயற்சியை கையாண்டு வெற்றியை வசப்படுத்தியுள்ளார். இந்த வெற்றிப்பயணம் தொடர்பாக ஆஷா பேசுகையில், ‘இது ஒரு கடினமான பயணம். இதில் நான் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் கடினமான பயணத்தில் தான் வெற்றிக்கான வழி இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் வறியவர்களுக்கும்,அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன்’ என்கிறார் ஆஷா. இவருடைய வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் தரக்கூடியதாக உள்ளது. பிரச்னைகளுக்குள் மூழ்கி வாழ்வினைத் தொலைத்துவிடாமல் துணிவுடன் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சித்துக் கொண்டேயிருங்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி வசப்படும்.– பேராசிரியர், அ. முகமதுஅப்துல்காதர்

Related posts

பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!

பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்!