பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு ரூ.24லட்சத்தில் 6 புதிய வடங்கள் வாங்க நடவடிக்கை

நெல்லை,ஜூன்26: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு சுமார் 24 லட்சம் ரூபாய் செலவில் 6 புதிய வடங்கள் வாங்கவும், சண்டிகேஸ்வரருக்கு ரூ.59 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணியை விரைவில் துவங்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ேகாயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனிப்பெருந்திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். நெல்லையப்பர் கோயிலில் கடந்த 13ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21ம் தேதி நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன.

இதில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை உடைய சுவாமி நெல்லையப்பர் தேரானது 450 டன் எடையும், 85 அடி உயரத்தையும் கொண்டதாகும். கடந்த 21ம் தேதி நடந்த ேதரோட்டத்தின் போது சுவாமி தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது சுமார் 7 முறை வடம் அறுந்து போனது. திருச்செந்தூர் கோயிலில் இருந்து வடங்கள் வரவழைக்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது. இதனால் வழக்கத்துக்கு மாறாக சுவாமி, அம்பாள் தேர்கள் நிலையம் வந்தடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்களுக்கு புதிய வடங்கள் வாங்கவும், சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யவும், விநாயகர் தேர் சக்கரங்களை பழுதுபார்க்கவும் அறநிலையத்துறை முடிவு செய்தள்ளது. சுவாமி நெல்லையப்பர் தேருக்கு 250 அடி நீளத்தில் நான்கு வடங்களும், அம்பாள் காந்திமதி தேருக்கு 150 அடி நீளத்தில் 2 வடங்களும் சுமார் ரூ.24 லட்சத்திலும், சண்டிகேஸ்வரருக்கு ரூ.59 லட்சம் செலவில் புதிய தேர் செய்யவும், விநாயகர் தேர் சக்கரங்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மற்றும் நாகர்கோவில், திருச்சி, தென்காசி அருகே உள்ள பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் வடங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து வடங்களுக்கான போட்டோக்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்களுக்கான சரியான புதிய வடங்களை வாங்க அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டு வடங்கள் வாங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

Related posts

ஆதிதிராவிடர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது