பித்தளை காசுகளை தங்கம் எனக்கூறி நூதன முறையில் ரூ.30 லட்சம் அபேஸ்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பெரம்பூர்: சவுகார்பேட்டை தங்கசாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (46). காசி செட்டி தெருவில் பேக் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த ஒருவர், பணத்தேவை இருப்பதாக கூறி, ஒரு கிராம் எடையுள்ள 4 தங்க காசுகளை கொடுத்து ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றுள்ளார். அதே நபர் கடந்த 3 நாட்களுக்கு முன், சுரேஷ் கடைக்கு வந்து, ‘‘எனக்கு அவசர பணத்தேவை உள்ளதால், என்னிடம் உள்ள 4 கிலோ தங்க காசுகளை பெற்றுக்கொண்டு ரூ.90 லட்சம் கொடுங்கள். மீதி பணத்தை பிறகு கொடுங்கள்,’’ என கூறியுள்ளார். அதற்கு சுரேஷ், ‘‘தற்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை,’’ என்று கூறிவிட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷை சந்தித்த அந்த நபர், தங்க காசுகள் விற்பது தொடர்பாக மீண்டும் பேசியுள்ளார். அப்போது சுரேஷ், ‘‘என்னிடம் ரூ.30 லட்சம் தான் உள்ளது,’’ என கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், ‘‘முதலில் இதை பெற்றுக் கொள்கிறேன். பிறகு மீதி பணத்தை கொடுங்கள்,’’ என கூறியுள்ளார். இதையடுத்து, அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தாதாவாடி டிரஸ்ட் அருகே வைத்து, சுரேஷிடம் தங்க காசுகளை கொடுத்த அந்த நபர், ரூ.30 லட்சத்தை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். சுரேஷ் வீட்டுக்கு சென்று, அந்த தங்க காசுகளை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்