பாளை. கல்லூரியில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து அசத்திய மாணவர்கள்-தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடுவதை காட்சிப்படுத்தினர்

நெல்லை : பாளை. கல்லூரியில் இயேசு பிறப்பை வலியுறுத்தும் வகையில் விதவிதமான குடில்களை அமைத்து மாணவ, மாணவிகள் அசத்தினர். தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடுவதை சித்திரிக்கும் வகையிலும் காட்சிகளை அமைத்திருந்தனர். பாளை. தூய சவேரியார் கல்லூரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துறை ரீதியாக கிறிஸ்துமஸ் குடில் போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துறைகளுக்கு இடையிலான கிறிஸ்துமஸ் குடில்கள் போட்டி நேற்று நடந்தது. இதில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ‘இயற்கையில் இறைவன்’ என்னும் தலைப்பில் தனித்தனியாக வெவ்வேறு வடிவங்களில் மொத்தம் 22 கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்திருந்தனர். இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கைப் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள் குடில்களை முழுக்க முழுக்க இயற்கை பொருட்களைக் கொண்டு அமைந்திருந்தனர். அதன்படி நெல் நாற்றுகள், பஞ்சு காகிதங்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன அதேபோல் காகிதங்களால் மலைக்குன்று அமைத்து அதில் இருந்து தண்ணீர் வடிந்து குளத்தில் விழுவது போன்றும், அதனருகே கிறிஸ்து இயேசு மாட்டுத் தொழுவில் பிறப்பது போன்றும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் குடில்களை காட்சிப்படுத்தி இருந்தனர். மாணவ, மாணவிகளின் புதுப்புது கற்பனைகளோடு மெருகேறி இக்குடில்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைவதை தடுப்பது குறித்தும், இறைவன் தந்த இயற்கை சொர்க்கமான வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு குடில்கள் அமைத்திருந்தனர். ‘நான் விடும் மூச்சுக்காற்றில் நீ வாழ்கிறாய், என்னை அழிப்பது உன்னை வதைப்பதற்கு சமம்’ என மரங்கள் பேசுவதுபோல் குடில்கள் காணப்பட்டன. பாளை. மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி, மாணவர்கள் அமைத்திருந்த குடில்களை பார்வையிட்டு கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். தொடர்ந்து தேர்வு குழுவினர் 3 குடில்களை சிறந்த குடில்களாக தேர்வு செய்தனர் மாலையில் சிறந்த குடில்கள் அமைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சேவியர் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம், கல்லூரி முதல்வர் மரியதாஸ், செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் இனிப்புகள் வழங்கப்பட்டன….

Related posts

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதியில் வெற்றி?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து