பாலூர் – கண்டிகை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நேரக் கட்டுப்பாடு

 

செங்கல்பட்டு, ஏப். 7: பாலூர் – கண்டிகை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பாலூர் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பாலூர் – கண்டிகை சாலை சிங்கபெருமாள் கோவில் பகுதியை அடுத்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை சென்றடைகிறது. வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான மணல், கல்குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால் மாசு படிந்த காற்றை சுவாசிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாவதாகவும், அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்களுடனான பேச்சு வார்த்தை நேற்று நடந்தது. அதில், மாணவர்கள் பள்ளி செல்லும் நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் பாலூர் – கண்டிகை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பாலூர் – கண்டிகை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கான தகவல் பலகையை பாலூர் போலீசார் அமைத்தனர். மேலும், நேரக் கட்டுப்பாடு விதிகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பாலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை