பாலியல், மன, உடல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அதற்குரிய தண்டனையை பெற்றுத் தருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, குருநானக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: கொரோனா என்ற அந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் என்னுடைய பணியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன்.கல்வி சேவைக்காக இக்கல்லூரி தொடங்கப்பட்டது. முதல்வர் கலைஞர் முன்னிலையில், அன்றைக்கு தமிழகத்தின் ஆளுநராக இருந்த உஜ்ஜல் சிங் அடிக்கல் நாட்டி இருக்கிறார். குருநானக் பெயரால் இந்த கல்லூரி தொடங்கப்படுவதால், அரசு சார்பில் 25 ஏக்கர் நிலம் அப்போது கொடையாக தரப்பட்டது. அதனை வழங்கியதும் திமுக ஆட்சிதான். குருநானக் கல்வி அறக்கட்டளைக்கு அன்று வழங்கிய உதவியானது, வீண் போகவில்லை. அதற்கு சாட்சிதான் இந்த 50வது ஆண்டுவிழா, இந்த சிறப்பான பொன்விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இந்த கல்வி நிறுவனம், தமிழக அரசுக்கு பல நிலைகளில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கோவிட் என்று சொல்லக்கூடிய கொரோனா என்ற கொடுமையான தொற்று நோய் ஏற்பட்ட காலத்தில், பேரிடர் காலங்களில் பெரிதும் உதவி செய்யக்கூடிய, மக்களுக்கு பல வகைகளில் துணை நிற்கக்கூடிய கல்லூரிகளில் முதல் கல்லூரி எது என்று கேட்டால், குருநானக் கல்லூரியாகத் தான் இருக்கும். சென்னையில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய சீக்கிய மக்கள் இங்கு சிறுபான்மை சமூகமாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஆற்றிய கல்வி பணி என்பது பெரும்பான்மையை விட மகத்தானதாக அமைந்திருக்கிறது. அண்மை காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்வி சேவையாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவ செல்வங்கள், பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவ செல்வங்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனையைப் பெற்றுத் தரும். எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் எத்தனையோ சோதனைகளைக் கடந்துதான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். சோதனைகளை சாதனைகள் ஆக்கி வளர்ந்தாக வேண்டும்.தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்து விடுவதில்லை. குழந்தைகளை பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ அதுபோல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்து விடாது. மாணவ செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை.ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவிகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும், உங்களுடைய பிரச்னைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய அரசு இங்கே அமைந்திருக்கிறது. மக்கள் மனப்பூர்வமாக பாராட்டக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மக்களை இரு கை கொண்டு தூக்கி விடும் ஆட்சியாக இது அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்தி, நம்முடைய மாணவ சமுதாயம் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏ அசன்மவுலானா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், குருநானக் கல்லூரியின் தலைவர் ராஜிந்தர் சிங் பாசின், பொதுச்செயலாளர் மற்றும் தாளாளர் மஜ்ஜித் சிங் நாயர், பொருளாளர் கருமித்சிங் தனுஜா, கல்லூரி முதல்வர் எம்.ஜி.ரகுநாதன், ஆலோசகர் மெர்லின் மொரோயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை