பாலியல் புகார் மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை எதிர்க்கும் விவகாரம்: சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  சென்னையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகளில்  ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் அளித்த புகாரில் தமிழக அரசு விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில், மாநிலங்களவை பாஜ உறுப்பினரான சுப்பிரமணியசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிய கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுவதாகவும், இதில் ஆளுநர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், தலைமை செயலாளரை அழைத்து விளக்கம் பெற வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இதே நிலை நீடித்தால் ஆட்சி கலைப்பிற்கு பரிந்துரைப்பதை விட வேறு வழியில்லை என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுப்பதை, குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி, சுப்பிரமணியசாமி கடிதம் எழுதியது அரசியல் சட்டத்திற்கும், அவர் வகிக்கும் எம்பி பதவிக்கான விதிமுறைகளுக்கும் எதிரானது.  இந்த புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கும், தமிழக காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும்.  போக்சோ சட்டத்தில் பதிவான வழக்குகளின் விசாரணையில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் சுப்பிரமணியசாமி பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு