பாலியல் தொல்லையை தாயிடம் சொன்னதால் 14 வயது சிறுமியின் தலையை துண்டித்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை: சேலம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சேலம்: சேலம் அருகே 14 வயது சிறுமியின் தலையை துண்டித்து படுகொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தளவாய்ப்பட்டி சுந்தராபுரம் தெற்கு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மனைவி சின்னப்பொண்ணு. இவர்களது 2வது மகள் ராஜலட்சுமி (14). தளவாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் என்ற கார்த்திக் (30). கதிர் அறுக்கும் இயந்திரத்தில் வேலை செய்து வந்த தினேஷ்குமாருக்கு மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனர்.கடந்த 2018 அக்டோபர் 23ம் தேதி, பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் மாரியம்மன் வேடம் போடுவதற்கு சிறுமி ராஜலட்சுமி பெயர் கொடுத்திருந்தார். இதற்காக 22ம் தேதி மாலை, தினேஷ்குமாரின் தோட்டத்திற்கு சென்று மல்லிகை பூக்களை பறித்து தாயாரிடம் கொடுத்துள்ளார். இருவரும் அதை கட்டிக்கொண்டு இருந்தனர். இரவு 7.30 மணிக்கு திடீரென கையில் அரிவாளுடன் தினேஷ்குமார், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து, அவளது தலைமுடியை பிடித்து தாக்கியவன், அடுத்த சில நிமிடங்களில் ஆட்டை அறுப்பது போல் சிறுமியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தான். பின்னர் தலையை மட்டும் தனியாக எடுத்துச்சென்று தளவாய்ப்பட்டி-ஈச்சம்பட்டி சாலையில் வீசிவிட்டு, தனது வீட்டிற்குள் போய் பதுங்கிக் கொண்டான். சேலம் மாவட்டத்தையே உலுக்கிய இந்த கொடூர கொலைகுறித்து, ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ்குமார், சிறுமி ராஜலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவமானம் ஏற்பட்டு விடுமோ? என்ற ஆத்திரத்தில் வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.  இதுதொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 294பி (ஆபாசமாக பேசுதல்) மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து, தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி முருகானந்தம் நேற்று முன்தினம் வாலிபர் தினேஷ்குமார் குற்றவாளி என உறுதி செய்தார். தண்டனை விவரம் நாளை (நேற்று) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி நேற்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். அப்போது சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆயுள் தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து தினேஷ்குமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பை கேட்டு தினேஷ்குமார் கதறி அழுதான். அவரது மனைவி, மகன் கதறி அழுதனர்.* முதல் தூக்கு தண்டனைசிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு முதலில் சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2019ல் சேலத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைந்தது. இதையடுத்து இந்த வழக்கு, போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குற்றவாளியான தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி முருகானந்தம் நேற்று தீர்ப்பு அளித்தார். இது சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.* ஆறுதல் அளிக்கிறது பெற்றோர் உருக்கம்தீர்ப்பு குறித்து சிறுமியின் பெற்றோர் சாமிவேல்-சின்னப்பொண்ணு கூறுகையில், ‘‘எங்கள் மகள் நன்றாக படிப்பாள். கலெக்டராகணும் என்று கூறிக்கொண்டே இருப்பாள். பள்ளியில் நடக்கும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வாள். சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் கூட, மாறுவேட போட்டிக்கு தயாரானாள். அப்படிப்பட்டவளை கொடூரமாக கொலை செய்ததால் 4 ஆண்டாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்தோம். இப்போது குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது ஆறுதலாக உள்ளது,’’ என்றனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது