பாலியல் தொல்லையால் ராஜினாமா செய்த பெண் நீதிபதிக்கு மீண்டும் வேலை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண் நீதிபதி கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு  மீண்டும் பணி வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்ட கூடுதல் பெண் நீதிபதி, இம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை  தருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் மீது புகாரும் அளித்தார். இந்த பிரச்னையால் கடந்த 2014ம் ஆண்டு பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். உயர் நீதிமன்ற நீதிபதிக்கு  எதிரான இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க, அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையில் 3 பேர் குழு 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையில், ‘உயர் நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல்  குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது,’ என தெரிவித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘பெண் நீதிபதிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.  கட்டாயத்தின் பேரில்தான் அவர் ராஜினாமா  செய்யும் நிலை ஏற்பட்டது,’  என்று தெரிவித்தார்.  இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில், ‘பெண் நீதிபதி தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தார் என்று கருத முடியாது. எனவே, அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். ஆனால், பணியில் இருந்து விலகிய 2014ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துக்கான சம்பளம், சலுகைகள் மற்றும் இதர படிகளை வழங்க முடியாது,’ என்று கூறியுள்ளனர்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்