பாலக்காடு-மதுரை பயணிகள் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை

மானாமதுரை: பொள்ளாச்சி-மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தென்னக ரயில்வேயில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரத்தில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மீட்டர்கேஜ் பாதை மூலம் சென்னை, பாலக்காடு, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணிக்காக கடந்த 2006 ஜூலை 14ம் தேதி கோவை, பாலக்காடு தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிதி ஒதுக்கப்படாமலும் மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின்மையாலும் பல ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்து வந்த அகலப்பாதையின் ஒரு கட்டமாக ராமேஸ்வரம்-மதுரை இடையே அகல ரயில் போக்குவரத்து 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ல் துவங்கியது.பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பிறகு படிப்படியாக பழநி, உடுமலை, பொள்ளாச்சி வரை பாதைப்பணிகள் முடிவுற்றதையடுத்து மதுரை-பழநி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கடந்த ஆண்டு பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி-பாலக்காடு இடையே பணிகள் முடிக்கப்பட்ட பின் திருச்செந்தூரில் இருந்து பழநி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை பாலக்காடு ரயில்வே கோட்டம் பாலக்காடு வரை நீட்டித்துள்ளது.ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 40 கி.மீ அகல ரயில் பாதை பணி முடிவடைந்தும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.ராமேஸ்வரத்தில் இருந்து பாலக்காடு, கோவைக்கு நேரடியாக இயக்கப்பட்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டு பத்தாண்டுகளாகியும் இவற்றை மீண்டும் இயக்க ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகம் மட்டுமல்லாமது கேரள மாநில பயணிகளும் வேறுவழியின்றி அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.பயணிகள் கூறுகையில், ‘‘பத்தாண்டுகளுக்கு முன்புவரை ராமேஸ்வரத்தில் இருந்து கோவை, பாலக்காட்டிற்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள பல கிராமமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வசதியாக இருந்தது. இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கோவைக்கும் கேரளாவிற்கும் கடல் உணவுகள் தினமும் சென்றன. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வேலைக்கு சென்றவர்களுக்கும் அடிக்கடி வந்து செல்ல வசதியாக இருந்தது.இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் அகலப்பாதை பணிக்காக கோவை, பாலக்காடு பயணிகள் ரயிலை நிறுத்தியதால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு பஸ்களைவிட்டால் வேறு வழியில்லை. தற்போது மதுரையில் இருந்து பாலக்காட்டிற்கு மாலை 4.10 மணிக்கும், மறுமார்க்கமாக காலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து மதுரைக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.தொழிலாளர்கள் அதிக பயனடைவர்ரயில் பயணிகள் சேகர், ஆறுமுகம் கூறுகையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், நடுத்தர குடும்பத்தினர் தொழில்நகரான கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்குமுன் தினமும் கோவை, பாலக்காடு வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள் மூலம் எளிதாக சென்று வந்தனர். அதே போல கேரளாவில் இருந்தும் ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் வந்து சென்றனர். எனவே கோவை, பாலக்காட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கும் வரை பொள்ளாச்சி மதுரை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி