பாலகனாக வந்த பத்மநாபன்…

அனந்தபுரம், காசர்கோடு, கேரளாவில்வமங்களம் சுவாமிகள் எனும் முனிவர், தனது ஆசிரமத்தில் விஷ்ணு சிலையை நிறுவி, தினமும் மலர்களால் அலங்கரித்து வழிபட்டு வந்தார். ஒரு நாள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது, அவருடைய ஆசிரமத்தின் முன்பாக இருந்த நந்தவனத்தில், ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம், ‘தம்பி நீ யார்? என்று விசாரித்தார். அவன், ‘சுவாமி! நான் ஒரு அனாதை. எனக்கென்று யாருமில்லை.’ என்றான். முனிவர் அவனிடம், ‘தம்பி, என்னுடன் இந்த ஆசிரமத்தில் தங்கிக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.‘சுவாமி! நான் தங்கிக்கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைச் சிறிது கூடக் கடிந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால், நான் போய் விடுவேன்’ என்றான். முனிவரும் அவனுடைய நிபந்தனைக்குச் சம்மதித்தார். சிறுவன் அங்கேயே தங்கினான். ஆசிரமத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான். அவ்வப்போது அவன் விளையாட்டாகச் செய்யும் சிறிய தவறுகள், அவரை எரிச்சலடையச் செய்யும். இருப்பினும், அவனைக் கண்டித்தால், அவன் போய் விடுவானே என்கிற அச்சத்தில் பேசாமலிருந்தார்.ஒருநாள், விஷ்ணு வழிபாட்டுக்கு வைத்திருந்த பாலை சிறுவன் குடித்து விட்டதால் முனிவர், அவனிடம் சினம் கொண்டார். சிறுவன், ‘சுவாமி! இனி, நான் இங்கிருக்க மாட்டேன். இனிமேல் நீங்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும்’ எனக்கூறிச் சென்றான். முனிவர், அந்தச் சிறுவனைத் தேடி அலைந்தார். அனந்தக்காடு பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார். அருகில் சென்றதும் சிறுவன் அங்கு இல்லை. அந்த இடத்தில், விஷ்ணு படுக்கை நிலையில் (அனந்த சயனம்) இருப்பது அவருக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான், அவருக்குத் தன்னுடன் இருந்த சிறுவன், விஷ்ணு என்பது புரிந்தது. விஷ்ணுவை வணங்கிய முனிவர், தனக்குக் காட்சியளித்த அதே இடத்தில் கோயில் கொண்டருளவேண்டும் என்று வேண்டினார். பெருமாளும், அவருடைய வேண்டுதலுக்காக அங்கேயே கோயில் கொண்டு அருளினார். இந்தக் கோயில் செவ்வக வடிவிலான ஏரி ஒன்றின் நடுவில் புல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குச் செல்ல ஏரியின் கரையிலிருந்து சிறிய பாலம் உள்ளது. கோயிலின் கருவறையில் அனந்தன் எனும் பாம்பின் மேல் விஷ்ணு அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரை அனந்தபத்மநாபன் என்று அழைக்கின்றனர். அவரின் இருபுறமும் பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக, அனுமன் மற்றும் கருடன் ஆகியோர் வணங்கிய நிலையில் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்குத் தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் திரும்பக்கிடைக்கும் என்கின்றனர். இக்கோயிலின் மூலவர் சிலை, ‘கடுசர்க்கரா’ எனும் எட்டு விதமான (அஷ்டபந்தன) மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டது. இதனால்தான் இங்குள்ள மூலவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்பாலா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனந்தபுரம். காசர்கோடுவிலிருந்து, மங்களூர் செல்லும் வழியில் கும்பாலா இருக்கிறது.தொகுப்பு: ச.சுடலை குமார்

Related posts

கருவூர்த் தேவர்

கோணிப்பையை அனுப்பிய அபிராமி!

திருவெள்ளக்குளம் ஸ்ரீ நிவாசப் பெருமாள்