Tuesday, July 2, 2024
Home » பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி

பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி

by kannappan

பராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று. சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையான தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக் கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும், மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின.மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண்ணிய பலன்களும், பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்ததால் ஆணவம் கொண்டு  முனிவர்களின் யாகங்களை அழித்தான். அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை.முனிவர்களும், ரிஷிகளும் யாகங்களையும், பூஜைகளையும் செய்யாமல் உயிருக்கு பயந்து குகைகளிலும், பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்வதற்கு அருளும் யாகங்கள் நடை பெறவில்லை. அதனால் மழை பொய்த்துப் போனது. மழை பெய்யாததால் பயிரினங்கள் செழிக்கவில்லை. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ்சம், அன்ன ஆகாரங்கள் இன்றி உயிரினங்கள் மடிந்தன.அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச்சாரலில் ஒன்று கூடி பராசக்தியைப் பிரார்த்தித்தனர் தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர்களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா? என வேண்டினர். இந்த பிரபஞ்சத்தையே படைத்த பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள்.அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப்பயிர் காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையோடு பொழிந்தன. உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி பின்  பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்க ஏற்பாடு செய்தாள். நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கிய தேவி அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர்கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர்.யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும். அதனால் தேவி வெறும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவும் அழிக்கும் வளையும். எனவே அழிவின் பலனாக அதுவே அவனை அழிக்கும் வளையமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று  தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். பலன்களை இழந்த  துர்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.  உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் வருந்து தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் மழையாக மாறி ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி, குளங்களையெல்லாம் நிரப்பியது. மழை பொழிந்து தண்ணீர்ப்பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர்ந்து உலகம் சுபிட்சமானது.தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்ற பெயரிலும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்ற பெயரிலும் அவர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்றிலிருந்து சாகம்பரி தேவி வழிபடப்பட்டு வருகிறாள். துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு. சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங்கப்படுகிறாள்.அன்று முதல் புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை எத்தனை காய்கறி, கீரை வகைகள் உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தலாக்கி மகிழ்வர். சில ஆலயங்களில் அம்பாள் மற்றும் ஈசன் சந்நதியில் பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர்.பின் கயிற்றில் காய்கறிகளையும், பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும், கீரைகளையும் பசுமைத் தோரணமாக கட்டித் தொங்கவிடுவதே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.நவராத்திரி கொலுவில் உள்ள பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். பக்தர்கள் இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் அன்று ஆலயத்திற்கு வருவார்கள். தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம், மயிலை கபாலீஸ்வரம் ஆலயம், வெள்ளீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், திருவாரூர் தியாகராஜர் ஆலயம் போன்றவற்றில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.தன் தாய் பராசக்தியைப் போலவே முருகன் சங்க இலக்கியங்களில் கடிஉண்கடவுள் எனும் பெயரில் வணங்கப் பட்டுள்ளார். புதிதாக விளைந்த தானியங்கள் மற்றும் கதிர்களுக்கு கடி எனும் பெயருண்டு. அறுவடை செய்த நெல், சோளம், கம்பு, கோதுமை, தினை போன்ற தானியங்களை அந்நாளில் முருகப்பெருமானுக்கு படைப்பர். அந்த தானியங்களை நிவேதனமாக ஏற்பதால் முருகனை கடிவுண்கடவுள் என வணங்கி வழிபட்டுள்ளனர்.ஹரிச்சந்திரனுக்கு சாகம்பரி தேவி உதவியதாக புராணங்களில் உள்ளது.நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் பெற்றவன் ஹரிச்சந்திரன். விசுவாமித்திர மகரிஷி ஹரிச்சந்திரனை பொய் சொல்ல வைப்பதாக சபதம் பூண்டார். ஹரிச்சந்திரன் தன் கனவில் தோன்றி அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால் ஹரிச்சந்திரன் அவனது நாட்டை தனக்குத் தந்து விட வேண்டும் என்றும் அவர் கூறினார். கனவே ஆயினும் தான் வாக்கு தந்ததாக முனிவர் கூறியதால் தன்நாட்டை அவருக்கு ஹரிச்சந்திரன் தந்தான். தனது மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு காசி எனும் வாரணாசியை அடைந்தான்.அங்கும் தொடர்ந்தார் விசுவாமித்திர முனிவர். அவர் நீ கொடுத்த தானம் பூர்த்தியாவதற்கு தட்சணை தர வேண்டும் என்றார். நாட்டையும் செல்வங்களையும் இழந்த ஹரிச்சந்திரன் தட்சணையாகத் தர ஏதுமில்லாமல் தன் மனைவியையும் மகனையும் ஒரு அந்தணருக்கு விற்று அந்த பணத்தை தட்சணையாக விசுவாமித்திரரிடம் தந்தான். அந்த பணம் போத வில்லை என விசுவாமித்திரர் கூறினார். அதனால் மனம் வருந்திய ஹரிச்சந்திரன் தன்னையும் சுடலை காக்கும் வெட்டியான் ஒருவரிடம் விற்றான். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினான் ஹரிச்சந்திரன். அவன் மனைவியும் மகனும் அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து வந்தனர்.ஒரு நாள் பூஜைக்கான பூப்பறிக்கச் சென்ற ஹரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவிக்கு ஆள் கூட இல்லாத ஹரிச்சந்திரனின் மனைவி தனது மகனின் பூதவுடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்குச் சென்றாள். மகனின் உடலை எரிக்க செலுத்த வேண்டிய வரியைக் கொடுக்கக்கூட அவளிடம் பணம் இல்லை. ஹரிச்சந்திரனின் கண்களில் அவள் கட்டியிருந்த திருமாங்கல்யம் தென்பட்டது. அதை விற்று அந்த வரியை கட்டுமாறு ஹரிச்சந்திரன் அவளிடம் கூறினான். ஹரிச்சந்திரனைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் அந்த திருமாங்கல்யம் தெரியாது எனும் வரத்தை அவள் பெற்றிருந்ததால் வெட்டியானாக இருந்தவன் ஹரிச்சந்திரனே என்பதை அவள் அறிந்தாள்.இருவரும் மனமுருகி தங்கள் குல தெய்வமும், இஷ்ட தெய்வமுமான சாகம்பரி தேவியை பிரார்த்தனை செய்தனர். தேவியின் கருணையால் அமிர்த மழை பெய்தது. அம்பாளின் அமிர்த மழையில் நனைந்த ஹரிச்சந்திரனின் மகன் பிழைத்தெழுந்தான். பின் விசுவாமித்திரரும் ஹரிச்சந்திரனின் நேர்மையில் மகிழ்ந்து இழந்த அவன் செல்வங்களை மீண்டும் அவனுக்குக் கிடைக்கச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.ஆதிசங்கரர் இந்த சாகம்பரி தேவியைப் பற்றி தன் கனகதாராஸ்தவத்தில் குறிப்பிட்டுள்ளார்.கீர்தேவதேதி கருட த்வஜ ஸுந்தரீதிசாகம்பரீதி சசி சேகர வல்லபேதிஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேஷ ஸம்ஸ்திதாயைதஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்  தருண்யைஒரே பரமாத்மா த்ரிமூர்த்திகளாகிஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் என விளையாட்டுப் பண்ணும்போது அவர்களின் மனைவியர் வடிவில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியேதானென்று சொல்லியுள்ளார். அவர்கள் கீர்தேவதை, கருடத்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசி சேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நான்கு சக்திகளைக் கூறுவானேன்?பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் வரிசையின்படி முதலில் பிரம்மனின் மனைவி கீர்தேவதை எனும் வாக்தேவியான சரஸ்வதி, அடுத்தது கருடக்கொடியுடைய திருமாலின் ரூபலாவண்யம் மிக்க கருடத்வஜஸுந்தரி துதியின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி, அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் சாகம்பரி என்றும் சசிசேகர வல்லபா என்றும் இருக்கிறது. பஞ்சகாலத்தில் தேவி தன் சரீரத்திலிருந்தே காய்கறிகளை உண்டு பண்ணி பக்தர்கள் உண்ண அனுகிரகம் செய்தாள். அவளே சாகம்பரி. அவள் ஈசனுடைய சக்தியே.  ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய என்று சொல்லியபடி பிரளயமான ஸம்ஹாரத்திற்கு உதவி செய்யாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் மக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து காத்திருக்கிறாள். த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நான்காவதாக ஒன்றை ஏன் இப்படி ஆச்சார்யாள் சொல்லவேண்டும்?அவர் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை அவருக்கு நன்கு தெரியும். தனலக்ஷ்மி, தான்யலக்‌ஷ்மி என அஷ்டலக்ஷ்மிகளைச் சொன்னாலும் லக்ஷ்மி என்றால் தனத்தைத்தான் நினைப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் தனத்தை சாப்பிட முடியுமா? அதனால்சாப்பாடு தரும் அம்பிகையை லக்ஷ்மியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்பதால்தான் சாகம்பரியைக் குறிப்பிட்டார். அப்புறம் ப்ரளயத்திற்கு சுவாமியான ருத்ரனின் சக்தியை சசிசேகரவல்லபா என்றார்.அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவரின் பிரியமான பத்தினி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடக லீலை நடத்தும்போதும் ஸதாசிவனாக மோட்சத்தையே அனுகிரகம் செய்யும் போது கூட சசிசேகரனாகத்தான் இருக்கிறார். எனவே, படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் புரியும் பரப்ப்ரம்ம சக்தி பல்வேறு வடிவங்கள் எடுத்தாலும் அவை ஒன்றே என்பது நிரூபணமாகிறது.லக்ஷ்மிதான் சரஸ்வதி, பார்வதி என்று சொன்னபின் சிவ – விஷ்ணு – பிரம்மாக்களை மட்டும் வித்தியாசம் மாதிரி விட்டுவிடலாமா > எனவே தான் அந்த ஸ்லோகம் முடிகிற இடத்தில் த்ரிபுவநைக குரோஸ்தருணி என்று முடிகிறது. திரிபுவனங்களுக்கும் குருவாக இருப்பவர் மஹாவிஷ்ணு. அவரின் பிரிய சக்தி லக்ஷ்மி என்று அர்த்தம். தட்சிணாமூர்த்தியின் மூல குரு வடிவத்திலிருந்து அவதரித்த மஹாவிஷ்ணுவைச் சொல்லும் போதும், மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய நான்முகனைச் சொல்லும்போதும் பேதங்கள் மறைந்து போகிறது.சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்தராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கொல்கொத்தா,மஹாராஷ்ட்டிரா போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.சாகம்பரி த்யானம்ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீலோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்சாகம்பரி காயத்ரிஓம் சாகம்பர்யை வித்மஹே சக்ஷாஷ்யை ச தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத்.செய்தி: ந. பரணிகுமார்படம்: அமரர் ஸி.ஏ.ராமச்சந்திரன்

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi